ஆளும் அ.தி.மு.க.,வை தொடர்ந்து, தி.மு.க., கூட்டணியிலும், திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனின் நக்கல் பேச்சால், கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள்,கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.
தங்களை தந்திரமாக வெளியேற்ற, சதி செய்வதாகவும், ஆளும் அணியில் இருக்கும், பா.ம.க.,வை இழுத்து, காங்கிரஸ் பேரத்தை குறைக்கவும், தி.மு.க., தலைமை
திட்டமிட்டு காய் நகர்த்துவதாக, அக்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அடுத்த சட்டசபை தேர்தலை, யார் தலைமையில் சந்திப்பது; முதல்வர் வேட்பாளர் யார் என்ற போட்டி, அ.தி.மு.க.,வில் எழுந்துள்ளது. இதில், முதல்வரும், துணை முதல்வரும் மோதுவதால், முடிவு காண முடியாமல், வரும், 7ம் தேதிக்கு, பிரச்னையை தள்ளிப் போட்டுள்ளனர். இந்நிலையில், தி.மு.க., கூட்டணியிலும், புதிய சலசலப்பு உருவாகியுள்ளது. அதற்கு, அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகனே காரணமாக இருப்பதால், இதன் பின்னணியில் தலைமையின் ஆதரவு இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.வெற்றி
தற்போது, தி.மு.க., அணியில், காங்கிரஸ், ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் உள்ளன. இக்கட்சிகளின் ஆதரவில் தான், லோக்சபா தேர்தலை, தி.மு.க., சந்தித்தது; அமோக வெற்றி பெற்றது. எனவே, அடுத்த ஆண்டில் நடக்கும் சட்டசபை தேர்தலிலும், இக்கூட்டணியே தொடரும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமீப நாட்களாக, தி.மு.க., அணியில், அரசல்புரசலாக ஒரு விவகாரம் வெடித்திருக்கிறது.காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர, மற்றவை எல்லாம்,தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்படுகிறது.இதற்கு உடன்பட்டால், தங்கள் கட்சியின் தனித்தன்மை பறிபோகும் என்ப தால், கூட்டணி தலைவர்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த சூழ்நிலையில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், 'காந்தி பிறந்த நாளில், காமராஜர் மறைந்த நாளில், இந்த இருவர் கனவுகளை நனவாக்க, அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும், ரஜினி முயற்சிக்கு உறுதுணையாக இருப்போம்' என, தெரிவித்துள்ளார். அதாவது, வெறுப்பு அரசியல் செய்யாதவர், மகாத்மா காந்தி; ஊழல் இல்லாத ஆட்சி நடத்தியவர், காமராஜர். இந்த இரு தலைவர்களை, ரஜினி பின்பற்றி வருகிறார் என்பதை, தமிழருவி மணியன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு; தமிழருவி மணியனின் அறிவிப்பால், தி.மு.க.,வில் அதிர்வு ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, துரைமுருகன், நேற்று முன்தினம் வேலுாரில் அளித்த பேட்டி ஒன்றில், 'தி.மு.க., கூட்டணியில் உள்ள சில கட்சிகள், எம்.எல்.ஏ., தேர்தலில், 'சீட்' போதவில்லை என வெளியேறும். அங்கே இருக்கும் சில கட்சிகள், தி.மு.க., கூட்டணிக்கு வரும்.'தேர்தல் நேரத்தில், இது சகஜம். எனவே, தி.மு.க., கூட்டணியில் மாற்றம் வர வாய்ப்பு உள்ளது' என்றார்.துரைமுருகனின் பேச்சு, தி.மு.க., கூட்டணி கட்சிகளிடம் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் உருவாக்கி உள்ளது. அதாவது, ஏற்கனவே, கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., நிபந்தனையால் அதிருப்தியில் உள்ளன.அதை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வெளிப்படையாகவே காட்டியுள்ளார்.
'கூட்டணி கட்சிகள் தயவு இல்லாமல், தி.மு.க., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றால், அந்தளவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால், ஏன் கூட்டணி கட்சிகளை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்த வேண்டும்?' என, கேள்வி எழுப்பி உள்ளார்.'கூட்டணி கட்சிகளே தேவையில்லை என்கிற நிலையில், பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லையே' என்றும், திருமாவளவன் கூறியிருக்கிறார்.இந்த நிலையில், பா.ம.க.,வை மனதில் வைத்து, 'தி.மு.க., கூட்டணியில் மாற்றம் வரும்' என்ற கருத்தை, துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஒரே கல்லில், இரண்டு மாங்காய் அடிப்பதற்காக, தி.மு.க., கூட்டணியில் இருந்து, சில கட்சிகள் வெளியே போகும் என்றும், அ.தி.மு.க., அணியில் இருந்து, பா.ம.க., வரும் என்றும், துரைமுருகன் கூறியிருக்கிறார்.
அதாவது, பா.ம.க.,வுக்கு தி.மு.க.,வின் கூட்டணி கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக, துரைமுருகன் கூறுகிறார். பா.ம.க.,வை கூட்டணியில் சேர்த்தால், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறைய வாய்ப்பு உள்ளது. அதனால் ஏற்படும் அதிருப்தியில், சில கட்சிகள் வெளியேறலாம் அல்லது வெளியேற்றப்படலாம் என்பதை தான், தி.மு.க., கூட்டணி கட்சி களுக்கு, துரைமுருகன் உணர்த்திஇருக்கிறார். இது, திட்டமிட்டு வெளியேற்றும் சதி என, அக்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
துரைமுருகன் அறிக்கை:
தி.மு.க., கூட்டணியில், யார் யார் இருப்பர் என்ற கேள்விக்கு, 'இப்பொழுது எதையும் அறுதியிட்டு, இறுதியிட்டு கூற முடியாது. தேர்தல் காலங்களில் கட்சிகள் இடம் மாறுவது உண்டு.
'அப்படி, இங்கே இருப்பவர்கள் அங்கே போவதும், அங்கே இருப்பவர்கள் இங்கே வருவதும், கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கிறது' என்றேன்.வாயில், 'மாஸ்க்' அணிந்து பேசிய காரணத்தால், சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்க லாம்.அதனால், என்னிடம் ஆழ்ந்த உறவோடு இருக்கக்கூடிய சிலர் வருத்தம் அடைந்திருப்பதாக, எனக்கு செய்திகள் வந்தன. நான் அவ்வாறு கூறவில்லை. அப்படி நான் கூறியதாக எடுத்துக் கொண்டாலும், அதற்காக வருத்தப்படுகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
கிள்ளுக்கீரையா நாங்கள்?
'கூட்டணியில், கடைசி நேரத்தில் மாற்றம் வரும். அப்போது தான், எவன் எவன் எங்கிருக்கிறான் என, தெரிய வரும்' என, அரசியல் நாகரிகமற்ற முறையில், துரைமுருகன் பேசிய பேச்சு, தி.மு.க., கூட்டணி கட்சிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.இது தொடர்பாக, காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கூட்டணி கட்சிகளை காலம் காலமாக, தி.மு.க., கிள்ளுக்கீரையாகவே கருதுகிறது. ஏதோ பிச்சை போடுவது போலவே, தொகுதிகளைதருவதாக நினைக்கிறது. கடும் போட்டி நிறைந்த இன்றைய சூழலில், சிறிய கட்சியை கூட அரவணைத்து செல்ல வேண்டும் என்கிற அடிப்படை விஷயம் கூட, துரைமுருகனுக்கு தெரியவில்லை. இத்தகைய தலைக்கனத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால், ஆயுள் முழுக்க, தி.மு.க., எதிர்க்கட்சியாகத் தான் இருக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.ம.தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'பதவி வரும்போது, பணிவு வர வேண்டும் என, எம்.ஜி.ஆர்., பாடிய பாடல் வரிகள், துரைமுருகனுக்கு தெரியாதா; இத்தனை பதவிகளுக்கு வந்த பின்னும், உங்களுக்கு அந்த பணிவும், நாகரிகமும் வரவில்லையே' என, சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளார்.- நமது நிருபர் -