சென்னை: மாநிலங்கள், சந்தையில் கடன் வாங்கி கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது மாநிலங்களின் நிதி தன்னாட்சி உரிமையை பாதிக்கும். என தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
‛‛ 101வது அரசியல் சட்டம் மற்றும் சரக்கு மற்றும் தேவை வரி(மாநிலங்களுக்கு ஈடுசெய்தல்) சட்டம் 2017 ஆகியவற்றில் ஜிஎஸ்டி சட்டத்தை செயல்படுத்துவதால், ஏற்படும் வருவாய் இழப்பு 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்யப்படும் என மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட இறையாண்மை மிக்க உத்தரவாதத்தை மத்திய பா.ஜ., அரசு காற்றில் பறக்கவிட்டுள்ள செயல் மிகுந்த வேதனையளிக்கிறது.
வசூல் செய்யப்பட்ட ஈடுசெய்தல் நிதியை, சம்பந்தப்பட்ட ஜிஎஸ்டி மாநிலங்களுக்கு ஈடுசெய்யும் நிதியில் வரவு வைக்காமல், இந்திய தொகுப்பு நிதியில் வைத்து கொண்டு 47,272 கோடி ரூபாயை வேறு செலவுகளுக்கு மத்திய அரசு பயன்படுத்தி விட்டது என சிஏஜி குற்றம்சாட்டியுள்ளது. சிஏஜி கூறியுள்ளார் என்று ஒரு காரணத்தை மேற்கோள்காட்டி வருவாய் இழப்பீட்டினை ஈடு செய்ய முடியாது என பா.ஜ., அரசு கைவிரித்துள்ளது. மாநிலங்கள் வேண்டுமானால் சந்தையில் கடன் வாங்கி கொள்ளலாம் என கூறியிருப்பது மாநிலங்களின் நிதி தன்னாட்சி உரிமையை பாதிக்கும்.

மத்திய அரசு தனது பொறுப்பை தட்டி கழித்து மாநிலங்களே சந்தையில் கடன் வாங்கி கொள்ளலாம் என்ற அறிவிப்பை பல்வேறு மாநிலங்களும் எதிர்க்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் பழனிசாமி, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசின் முடிவு மாநில நிதி உரிமைகளுக்கு எதிரானது என்றும், அது குறித்து ஜிஎஸ்டி கவுன்சிலில் ஓட்டெடுப்பு நடத்தியே முடிவு செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தவில்லை. மாநில உரிமைக்காக பிரதமரிடம் கோரிக்கை வைக்க தைரியமும் இல்லை. கடிதம் எழுதிவிட்டால், ஜிஎஸ்டி வருவாய் இழப்பீட்டை மத்திய அரசு சரி செய்துவிடாது என்பதை பழனிசாமி உணர வேண்டும்.
கொரோனா பேரிடர் காலத்தில், தமிழகத்தின் நிதி நிலைமை தள்ளாடி கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய இழப்பீட்டு தொகையை அரசியலமைப்பு சட்டத்தின்படி உறுதியளிக்கப்பட்டுள்ள தொகையை உரிமையுடன் கேட்டு பெறுவதில் இதுவரை முதல்வர் பழனிசாமி தோல்வி கண்டுநிற்பது தமிழகத்தின் நிதி தன்னாட்சிக்கு ஆபத்து. இதனால், இனியும் அமைதி காக்காமல், அக்., 5ல் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடு செய்வது குறித்தும், மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என ஆக்கப்பூர்வமாக வலியுறுத்தி மற்ற மாநிலங்களின் ஆதரவினையும் பெறுவதற்கு முயற்சிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாளை திமுக பேரணி
உ.பி., விவகாரம் தொடர்பாக அம்மாநில அரசை கண்டித்து கவர்னர் மாளிகை நோக்கி நாளை (அக்.4 ம் தேதி ) திமுக பேரணி நடத்த உள்ளதாகவும் அவர் மற்றொறு அறிக்கையில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE