சென்னை : திராவிடப்பெருஞ்சுவர் என்ற பெயரில் திமுக.,வின் உதயநிதி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூகவலைதளங்களில் பலர் #திராவிடப்பெருஞ்சுவர் என்ற ஹேஷ்டாக் உடன் கருத்து பதிவிட்டு வருவதால் டுவிட்டரில் இன்று(அக்.,4) இது டிரெண்ட் ஆனது. இந்த ஹேஷ்டாக்கிற்கு எதிராக சிலர் #சைக்கிள்_சூசை_ஸ்டாலின் என்ற பெயரில் டிரோல் செய்து கருத்து பதிவிட்டு டிரெண்ட் ஆக்கினர்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா பிரச்னைகளுக்கு நடுவேயும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்த முறை கருணாநிதி, ஜெயலலிதா எனும் இரு பெரும் தலைகள் இல்லாமல் அந்தக்கட்சியினர் தேர்தல் களத்தை சந்திக்க உள்ளனர். அதேசமயம், ரஜினி, கமல் வருகையும் இந்த தேர்தலில் எதிரொலிக்க காத்திருக்கிறது.
இந்த முறை எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிர அரசியல் களத்தில் திமுக., கட்சியினர் களமிறங்கி செயல்பட தொடங்கினர். நீட், மொழி அரசியல் உள்ளிட்ட பிரச்னைகளை அக்கட்சி கையில் எடுத்துள்ளது. குறிப்பாக இது திராவிட மண் என்ற கொள்கையை முன்னிறுத்தி இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர். அதன் வெளிப்பாடாக அக்கட்சியை சேர்ந்த உதயநிதி, திராவிடப்பெருஞ்சுவர் என்ற பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் திராவிடம் எப்படி பிறந்தது. அதை அந்தக்கால குறுநில மன்னர்கள், அரசர்கள் தொடங்கி, தலைவர்கள் வரை எப்படி அதை காத்தனர். சுதந்திர இந்தியாவிற்கு பின் திராவிட மண்ணை ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் கட்டிக்காத்ததாகவும், இப்போது அந்த இடத்தில் திமுக., தலைவர் ஸ்டாலின் இருப்பதாகவும் அந்த வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது. திராவிடத்தை யாராலும் அசைக்க முடியாது ஏனென்றால் இது திராவிடப்பெருஞ்சுவர் என அதில் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ வெளியான சற்று நேரத்திலேயே டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. பலரும் அதை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்து பதிவிட்டனர். ஒருவர், ''இன்று நாம் வாழும் வாழ்விற்கான அடித்தளமே திராவிடம் தான். சமூகநீதி, பெண் விடுதலை என அனைத்தையும் பெற்று தந்தது திராவிடம். திராவிடத்தை இன்று நாமும் வழிபற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வோம்'' என பதிவிட்டார்.
இன்னும் சிலர் ''ஆரியத்தை அண்டவிடாமல் மாநிலத்தைக் காப்பாற்றிய எங்கள் சுயமரியாதை சுவர்'', ''நமக்கு ஒரு பேரு, பேருக்குப் பின்னாடி படிச்ச படிப்போட பேருன்னு நமக்குன்னு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது இந்த சுவரு'', ''தமிழகம் இன்றளவும் தனக்கான பாதையை தானே வடிவமைத்து கொள்கிறது, தனக்கு எதிரான ஒவ்வொரு அநீதிக்கும் எதிர்ப்புக்குரலை பதிவு செய்கிறது என்றால் அதன் விதை நம் திராவிடம் போட்டது தானே'', ''கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டு என்று எங்களை அறிவாயுதம் ஏந்தச் செய்த பேரியக்கம்...'', ''இது எங்க செவரு.... சம்பந்தம் இல்லாதவன் எல்லாம் அந்த பக்கம் நவுரு...'' என பதிவிட்டு வரவேற்றனர்.

அதேசமயம், ''இந்த சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க காத்து இருக்கோ..., ''டம்மி பீசா இருந்த பாஜக, 2001 தேர்தலில் திமுக ஆதரவுடன் 4 எம்.எல்.ஏ பதவிகளை வென்றது... அப்டினா திமுக., பாஜகவை ஜெயிக்க வைக்க எந்த அளவுக்கு கடுமையாக உழைத்திருப்பார்கள் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது'', சீனாவுக்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்பு. இரண்டுமே உடைந்து கொண்டிருக்கும் பெருஞ்சுவரை காப்பற்ற போராடி கொண்டிருக்கிறது. இரண்டுக்கும் காங்கிரஸோடு தொடர்பு..'',
இக்கதையில் தோன்றும் பெயர்கள் கதாப்பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே. தனிப்பட்ட மனிதரையோ சமுதாயத்தையோ குறிப்பிடுவன அல்ல, கொரோனா மன அழுத்தத்தை" போக்க இதுபோன்ற காமெடி வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது'', எல்லாம் சரி, ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி இந்த மூன்று தலைவர்களுடன் ஸ்டாலினையும் சேர்த்திட்டீங்களேடா...'' என பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துபதிவிட்டனர்.
மேலும் #திராவிடப்பெருஞ்சுவர் என்ற ஹேஷ்டாக்கிற்கு எதிராக #சைக்கிள்_சூசை_ஸ்டாலின் என்ற பெயரில் போட்டி ஹேஷ்டாக் உருவாக்கி பலர் டிரோல் செய்து வருகின்றனர். இதனால் இந்த இரண்டு ஹேஷ்டாக்குகளும் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE