மோகா: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண்மை சட்டங்களை குப்பை தொட்டியில் தூக்கி எறிவோம் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் மோகாவில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: உ.பி.,யில் இளம்பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இளம்பெண்ணை பறிகொடுத்த குடும்பத்தினர் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்வர் அவர்களை மிரட்டுகின்றனர். இந்தியாவில் இது தான் தற்போதைய நிலை. கிரிமினல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கொரோனா காலத்தில், வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது ஏன்? அதற்கு ஏன் இவ்வளவு அவசரம். இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு லோக்சபா, ராஜ்யசபாவில் விவாதம் நடத்தியிருக்க வேண்டும். விவசாயிகளுக்காக இந்த சட்டத்தை கொண்டு வருவதாக பிரதமர் கூறுகிறார். அது உண்மையென்றால், பார்லிமென்டில் வெளிப்படையாக விவாதம் நடத்த தயங்கியது ஏன்?

இந்த சட்டத்தால் மகிழ்ச்சியாக இருந்திருந்தால், நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்துவது ஏன்? காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த மூன்று கறுப்பு சட்டங்களை நீக்கிவிட்டு, அதனை குப்பை தொட்டியில் வீசி எறிவோம். இவ்வாறு ராகுல் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE