புதுடில்லி : ‛விஜய் மல்லையாவை, இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக, பிரிட்டன் அரசு எடுத்து வரும் ரகசிய நடவடிக்கைகள் குறித்து, எங்களுக்கு விபரம் எதுவும் தெரியாது' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
கர்நாடகாவின், பெங்களூருவை சேர்ந்த, தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டின் பல்வேறு வங்கிகளில் இருந்து, 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர், லண்டனுக்கு தப்பிச் சென்றார்.அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த, பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், சட்ட சிக்கல்கள் காரணமாக, அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான ஒரு வழக்கில், மத்திய அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறப்பட்டதாவது:மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று, திரும்ப செலுத்தாததால், பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அவரை, இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வர, சட்ட ரீதியான முயற்சிகளை, துாதரகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், விஜய் மல்லையாவை திரும்ப அனுப்ப, பிரிட்டன் அரசு, சில ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. அதில், எங்களுக்கு தொடர்பு இல்லாததால், அதுபற்றி விபரங்கள் எதுவும் தெரியாது.இவ்வாறு, விளக்கம் அளிக்கப்பட்டது.