லக்னோ : ஹத்ராஸ் சம்பவத்தை பயன்படுத்தி, மாநிலத்தில் கலவரத்தை துாண்டிவிட்டு, யோகி ஆதித்யநாத் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த, சர்வதேச அளவில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, உத்தர பிரதேச போலீசார் தெரிவித்து உள்ளனர்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த, தலித் பெண், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், சந்த்பா போலீஸ் ஸ்டேஷனில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது, பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சதித்திட்டம் தீட்டுதல், தேச துரோகம், ஜாதி மற்றும் மத கலவரங்களை துாண்டிவிடுதல், நாட்டின் ஒருமைபாட்டுக்கு ஊறு விளைவித்தல் உட்பட, பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டுஉள்ளது.
மாநிலத்தில் ஜாதி கலவரத்தை துாண்டிவிட்டு, யோகி ஆதித்யநாத் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த, சர்வதேச சக்திகள் சில சதி திட்டம் தீட்டி வருவதாகவும், போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.ஹத்ராஸ் போராட்டம் தொடர்பாக, ஒரு இணைய தளம் துவங்கப்பட்டு, அதில், போராட்டத்தை எப்படி தீவிரப்படுத்துவது, போலீஸ் தாக்குதல்களை எப்படி சமாளிப்பது போன்ற தகவல்கள் பகிரப்பட்டுஉள்ளதாக கூறப்படுகிறது.இந்த இணையதளம் நீக்கப்பட்டு விட்டதாக, போலீசார் தெரிவித்தனர். 'இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பல வாசகங்கள், அமெரிக்காவின் கருப்பினத்தவர்கள் போராட்ட இணையதளங்களில் பயன்படுத்தப்பட்டவை' என, போலீசார்
தெரிவித்தனர்.
ஹத்ராஸ் சம்பவம்: ஐ.நா., கருத்து
ஹத்ராஸ் சம்பவம் குறித்து, ஐ.நா.,வுக்கான, இந்திய துணை பிரதிநிதி நிஷிதா சத்யம், நேற்று கூறியதாவது:பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த பெண்கள், பாலியல் ரீதியான வன்கொடுமைகளுக்கு, அதிக அளவில் ஆளாகும் நிலை உள்ளன என்பதையே, உ.பி.,யின், ஹத்ராஸ் மற்றும் பலராம்பூர் படுகொலை சம்பவங்கள் உணர்த்துகின்றன.குற்றவாளிகள் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு, நீதி கிடைக்கவும், சரியான ஆலோசனை வழங்கி, சமூக பாதுகாப்புடன் கூடிய மறுவாழ்வுக்கு, ஆவண செய்யப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
குடும்பத்தினருக்கு பலத்த பாதுகாப்பு
ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு வழங்கப் பட்டுள்ள பாதுகாப்பை, போலீசார் மேலும் பலப்படுத்தி உள்ளனர். அவரது சகோதரரின் பாதுகாப்புக்கு, துப்பாக்கி ஏந்திய இரு போலீசார், நியமிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தை மாயம்
உ.பி.,யின் உன்னாவைச் சேர்ந்த, 23 வயது பெண், ஐந்து நபர்களால், கடந்தாண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நடந்த நிலையில், அந்த பெண், கொடூரமாக தீயிட்டு எரிக்கப்பட்டார்.
இதன் பின், சிகிச்சை பலனின்றி, டில்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில், பீஹாரில் வசிக்கும், இந்த பெண்ணின் சகோதரரின், 6 வயது ஆண் குழந்தை, கடந்த, 2ம் தேதியில் இருந்து காணவில்லை என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
'குற்றவாளிகளின் உறவினர்கள், குழந்தையை கடத்தி இருக்கலாம்' என, போலீசார் தெரிவித்தனர். பெண்ணின் சகோதரர் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கி வந்த, மூன்று போலீசார், 'சஸ்பெண்ட' செய்யப்பட்டனர்.