புதுடில்லி: ''செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஊக்குவித்து வருகிறோம். இந்த தொழில்நுட்பத்தில் உலகின் மையமாக இந்தியா மாறும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் , 'நிடி ஆயோக்' அமைப்பு இணைந்து, செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் மூலம், சமூக மேம்பாட்டுக்கான முயற்சிகள் எனப்படும், 'ரெய்ஸ் 2020' என்ற இந்த மாநாட்டை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளை நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதன் வாயிலாக, பெரிய நன்மைகளைப் பெறலாம். டிஜிட்டல் பரிவர்த்தனை முறைக்கு நாம் தயாரானோம். இந்த, கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காலத்தில், அந்தத் தொழில்நுட்பம் எந்தளவுக்கு நமக்கு உதவியது என்பதை கண்கூடாகப் பார்த்துள்ளோம்.
புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்துள்ளோம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் மூலமாக கற்கும் முறையை இது ஊக்குவிக்குகிறது. மின்னணு பாடத் திட்டங்களை, மாநில மொழிகளில் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம், தாய்மொழியில் அறிவியல், தொழில்நுட்பத்தையும், பல்வேறு பாடதிட்டத்தையும் மாணவர்கள் கற்க முடியும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில், இளைஞர்களுக்கான திட்டத்தை, ஏப்ரலில் அறிமுகம் செய்துள்ளோம். அதில், 11 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று, அடிப்படையை கற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் புதிய திட்டங்களை உருவாக்குவர்.செயற்கை நுண்ணறிவின் மூலம், சமூக மேம்பாடு, வளர்ச்சியை எட்ட முடியும். உலகின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையமாக, இந்தியா விரைவில் மாறும். இவ்வாறு, அவர் பேசினார்.