புதுடில்லி : '2ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது. தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை, தி.மு.க., தரப்புக்கு, மீண்டும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாக, அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சியில், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.இது தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தரப்பில், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சி.பி.ஐ., தவறிவிட்டது
இதில் குற்றம் சாட்டப்பட்ட, முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., வைச் சேர்ந்தவருமான ராஜா, அந்த கட்சி எம்.பி., கனிமொழி உள்ளிட்ட, 14 பேரையும், 2017 டிசம்பரில், சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. 'குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க, சி.பி.ஐ., தவறி விட்டது' என, அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில், 2018 மார்ச்சில், மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அனுமதி கடிதம்
இந்த மனுக்களை, விசாரணைக்கு ஏற்ற டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, 'இந்த வழக்கு விசாரணை, அக்., 5 முதல், தினமும் நடக்கும்' என, கடந்த மாதம் அறிவித்தார். இதன்படி, நேற்று விசாரணை துவங்கியது.அப்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான, டி.பி., ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிப் பால்வா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறியதாவது:இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய, சி.பி.ஐ.,க்கு மத்திய அரசு அளித்த அனுமதி கடிதத்தை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை.கடந்த, 2018 பிப்ரவரியில், மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையின்படி, 2ஜி விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் ஆஜராக, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், துஷார் மேத்தாவோ அல்லது அவரது பெயரிலோ, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
ஒத்திவைப்பு
இதற்கு, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் பதில் அளிக்கையில், ''சி.பி.ஐ.,க்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த விஷயங்கள், நிர்வாக ரீதியானது. ''நிர்வாக ரீதியான ஆவணத்தை, எதிர் மனுதாரர்களுக்கு தர வேண்டிய அவசியம் இல்லை,'' என்றார். இந்த விஷயத்தில், சில விளக்கங்கள் தேவைப்படுவதாக, நீதிபதி பிரிஜேஷ் சேத்தி தெரிவித்தார். இதற்கு, சி.பி.ஐ., தரப்பில், நாளை வரை அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி, நாளை வரை ஒத்தி வைத்தார்.
நெருக்கடி
தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ளது. இதற்கான பிரசாரத்துக்கு, தி.மு.க., தயாராகி வருகிறது.இந்நிலையில், 2ஜி வழக்கு விசாரணை, மீண்டும் துவங்கியுள்ளது, தி.மு.க.,வுக்கு தலைவலியாக இருக்கும் என, அரசியல் ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் கட்சி மேலிடத்தின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு, இந்த வழக்கில் தொடர்புள்ளதால், தி.மு.க.,வுக்கு நெருக்கடி ஏற்படும் என, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.