சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று மாலை, கவர்னரை சந்தித்து பேசினார்.அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்னை பெரிதாகி உள்ளது. தி.மு.க., சார்பில், தடையை மீறி, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு
வருகின்றன.
அறிக்கை
இந்நிலையில், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று மாலை, 5:00 மணிக்கு, கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார். அமைச்சர்கள் சி.வி.சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர், தலைமை செயலர் சி.வி.சண்முகம், டி.ஜி.பி., திரிபாதி ஆகியோர் உடன் சென்றனர்.இந்த சந்திப்பு, ஒரு மணி நேரம் நடந்தது. தமிழகத்தில், அரசு சார்பில் மேற்கொள்ளப்படும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, கவர்னரிடம்
முதல்வர் வழங்கினார்.
கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்; அண்ணா பல்கலை பிரிப்பு, பெயர் மாற்றம்; அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவக் கல்லுாரி சேர்க்கையில், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் ஆகியவை குறித்து, கவர்னரிடம் முதல்வர் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.