சென்னை : உ.பி., மாநிலம், ஹத்ராஸ் சம்பவத்திற்கு நீதி கேட்டு, தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி தலைமையில், தடையை மீறி, சென்னையில் நேற்று மெழுகுவர்த்தி பேரணி நடந்தது. ஏராளமான பெண்கள், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர்.
போலீசார் தடுத்து நிறுத்தி, அவர்களை கைது செய்தனர். உ.பி., மாநிலம், ஹத்ராஸ் என்ற இடத்தில், கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, சென்னை கவர்னர் மாளிகை நோக்கி, தி.மு.க., மகளிர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி, கிண்டியில் நேற்று நடந்தது.
தடுத்தனர்
இந்த பேரணியை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்து பேசியதாவது:ஹத்ராஸ் சம்பவத்தில், பெண்ணுக்கு நடந்த கொடுமையை தட்டிக் கேட்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறவும் சென்ற, காங்கிரஸ் தலைவர் ராகுலை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.அவரை பலவந்தமாக தாக்கி கீழே தள்ளியுள்ளனர். ராகுலை மட்டுமல்ல, ஜனநாயகத்தையும் சேர்த்து தள்ளி உள்ளனர்.
பெண்கள் அதிகமாக சித்ரவதைக்கு உள்ளாகும் மாநிலங்களை கணக்கெடுத்து பார்த்தால், உ.பி., முதலிடமும், அடுத்ததாக, தமிழகமும் உள்ளது. உத்தர பிரதேசம், ரத்த பிரசேதமாக மாறுவதை தடுக்கவே, இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. சி.பி.ஐ., விசாரணை நியாயமாக நடக்குமா என்ற, கேள்வி எழுந்துள்ளது. நீதிமன்றம் கண்காணிப்பில், விசாரணை நடத்தினால் தான் நியாயம் கிடைக்கும். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில், மாவட்ட வாரியாக, தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.
கனிமொழி பேசியதாவது:பா.ஜ., ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களை பாதுகாக்க, மத்திய அரசு தவறி விட்டது. பெண்களை பாதுகாக்க, பல சட்டங்கள் உள்ளன. ஆனால், அதை செயல்படுத்துவது இல்லை. உ.பி.,யில் தலித் பெண்கள், குழந்தைகள் மீது, பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது. கவர்னரை சந்தித்து மனு அளிக்கக் கூட, போலீஸ் துறை அனுமதி அளிக்கவில்லை. ஹத்ராஸ் பலாத்கார சம்பவம் குறித்து, நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்.
பாதுகாப்பில்லை
நாடு முழுதும் சீரழிந்துள்ளது; தமிழகமும் சீரழிந்துள்ளது. மத்திய அரசு சொல்வதை, மாநில அரசு அப்படியே கேட்டு செயல்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, கனிமொழி பேசினார்.தடையை மீறி பேரணி நடந்ததால், கனிமொழி உட்பட மகளிர் அணியினரை, போலீசார் கைது செய்தனர். அப்போது, 'கவர்னரை சந்தித்து மனு அளிக்க அனுமதிக்க வேண்டும்' என, கனிமொழி கோரிக்கை விடுத்தார்; போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, போலீசாருக்கும், கனிமொழிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கனிமொழி உட்பட மகளிர் அணியினரை, போலீஸ் வேனில் ஏற்றினர். வேனை நகரவிடாமல், தி.மு.க.,வினர் தடுத்து நிறுத்தி, போராட்டம் நடத்தினர்.சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த, கனிமொழி உள்ளிட்ட மகளிர் அணியினரை, பின்னர் விடுவித்தனர். மகளிர் அணியினர் கைது சம்பவத்திற்கு, ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
Advertisement