வி.ஐ.பி.,க்கு ரூ. 200 கோடியில் பங்களா? அலறவிட்ட வீடியோ!| Dinamalar

வி.ஐ.பி.,க்கு ரூ. 200 கோடியில் பங்களா? அலறவிட்ட வீடியோ!

Updated : அக் 13, 2020 | Added : அக் 06, 2020
Share
ஈச்சனாரி கோவிலுக்குச் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.உக்கடத்தில் ஆமை வேகத்தில் நடந்து வரும் பாலம் வேலைகளை பார்த்த மித்ரா, ''என்னக்கா, இந்த பாலம் வேலை இப்போதைக்கு முடியாது போலிருக்கே,'' என, விவாதத்தை ஆரம்பித்தாள். ''ஆமாப்பா, ஆத்துப்பாலம் வரை நீட்டிக்கறதுக்கு, இப்பத்தான், 'டெண்டர்' இறுதி
 வி.ஐ.பி.,க்கு ரூ. 200 கோடியில் பங்களா? அலறவிட்ட வீடியோ!

ஈச்சனாரி கோவிலுக்குச் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

உக்கடத்தில் ஆமை வேகத்தில் நடந்து வரும் பாலம் வேலைகளை பார்த்த மித்ரா, ''என்னக்கா, இந்த பாலம் வேலை இப்போதைக்கு முடியாது போலிருக்கே,'' என, விவாதத்தை ஆரம்பித்தாள்.

''ஆமாப்பா, ஆத்துப்பாலம் வரை நீட்டிக்கறதுக்கு, இப்பத்தான், 'டெண்டர்' இறுதி செஞ்சிருக்காங்க. இன்னும், 80 துாண் கட்ட வேண்டியிருக்கறதுனால, 2022-ஐ தாண்டிடும்னு, 'ஹைவேஸ்' அதிகாரிங்க சொல்றாங்க. அதுவரைக்கும் வாகன ஓட்டிகளுக்கு கஷ்ட காலம்தான்,''

''அச்சச்சோ... இன்னும் இரண்டு வருஷத்துக்கு ஊரை சுத்துற இம்சையை அனுபவிக்கணுமா,'' என்றபடி, கோட்டைமேடு வழியாக, டவுன்ஹாலுக்கு வந்த சித்ரா, கார்ப்பரேஷன் ஆபீசுக்குள் ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள்.

''அக்கா, கார்ப்பரேஷன் அதிகாரிகள் வட்டாரமே ஒரு வாரமா பரபரப்பா இருக்காமே,''''ஆமா, மித்து! ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு விசுவாசமா இருந்த நகரமைப்பு அலுவலரையே துாக்கிட்டாங்க. நம்ம, எம்மாத்திரம்னு ஒவ்வொரு அதிகாரியும் துாக்கமில்லாமல் புலம்பிட்டு இருக்காங்களாம்,''

''அவரும், அரசாணை வச்சிருக்காரே; எதுக்காக மாத்தணும்,''''மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட, அப்ரூவல் சம்பந்தமான ஒரு கோப்பு, மூணு மாசமா, கிடப்பில் கிடந்துச்சாம்; மண்டல அலுவலகத்துல ஒன்றரை மாசமும், பிரதான அலுவலகத்துல ஒன்றரை மாசமும் கெடப்புல போட்டிருக்காங்க,''

''இதை, மாநகராட்சி கமிஷனரும், துணை கமிஷனரும் கண்டுபிடிச்சிட்டாங்க. அதுக்கப்புறம், அப்ரூவல் சம்பந்தப்பட்ட விஷயங்களை தோண்டியிருக்காங்க. தோண்ட தோண்ட புதையல் கிடைக்கற மாதிரி, எக்கச்சக்க புகார் வந்திருக்கு. ஜோனல் லெவல்ல, 200 கோப்புகள் கெடப்பில் கெடந்தது தெரிஞ்சிருக்கு,''

''டவுன் பிளானிங் செக்சன்ல இருக்குற, ஒவ்வொரு அதிகாரியையும் கூப்பிட்டு எச்சரிக்கை செஞ்சிருக்காங்க. 'லஞ்சம் வாங்காம, ஒழுக்கமா வேலை பார்க்குறதா இருந்தா இருங்க; மாத்திக்க முடியாது'ன்னு சொல்றவங்க, பதவியை விட்டுட்டு கெளம்புங்கன்னு சொல்லியிருக்காங்க,''

''இனிமேலாவது, லஞ்சம் கொடுக்காமல், வரைபட அனுமதி கிடைத்தால் சந்தோஷம்தான்,'' என்ற மித்ரா, ''இருந்தாலும், கட்டட நிறைவு சான்று கொடுக்குறதுக்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேக்குறாங்களாமே,'' என, கிளறினாள்.

''நாய் வாலை நிமித்த முடியாதுன்னு சொல்வாங்களே. அது மாதிரி, 'டவுன் பிளானிங்' செக்ஷன்ல இருக்கறவங்க, கரன்சி மழையில் குளிக்கிறவங்க,''

''அதாவது, 8,070 சதுரடி வரைக்கும் கட்டடம் கட்டியிருந்தால், நிறைவு சான்று தேவையில்லைன்னு, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் தெளிவுபடுத்தியிருக்காரு,''

''ஏன்னா, கார்ப்பரேஷன் அதிகாரிகளால், வீடாக இருந்தால், 7,000 சதுரடி, வணிக பயன்பாடாக இருந்தால், 4,000 சதுரடிக்குள் கட்டடம் கட்டுறதுக்குதான், வரைபட அனுமதி கொடுக்க முடியும். 8,070 சதுரடி வரை சான்று தேவை இல்லைன்னு சொல்லியிருக்கறதுனால, கார்ப்பரேஷன் தரப்புல சான்று கொடுக்க அவசியமே இல்லை,''

''இருந்தாலும், சான்று தர்றதா சொல்லி, சில அதிகாரிகள், மக்களை அலைய விட்டு, ஒவ்வொருத்தரிடமும், ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியிருக்காங்க,''''லஞ்சம் வாங்குறதுக்கும், எடுபிடி வேலை செய்றதுக்கும், 'டவுன் பிளானிங்' செக்சன்ல இருக்குற ஒரு அதிகாரி, ஒப்பந்த தொழிலாளர்கள் சில பேரை வச்சிருக்காராம்,''

''கார்ப்பரேஷன்ல அதெல்லாம் கரெக்டா செய்வாங்க,'' என்ற மித்ரா, ''தெற்கு மண்டலத்துல லஞ்சம் வாங்குறதுக்காகவே, ஒரு உதவியாளரை நியமிச்சிருக்காங்களாமே,'' என, கிளறினாள்.

''அடடே, அதுவும் ஒனக்கு தெரிஞ்சு போச்சா,'' என்ற சித்ரா, ''கணவன், மனைவி இரண்டு பேருமே துாய்மை பணியாளர்கள். கோவைப்புதுார் வார்டுக்கு நியமிச்சிருக்காங்க. மனைவியை வார்டு ஆபீசுல இறக்கி விட்டுட்டு, மண்டல அலுவலகத்துக்கு வந்திருவாராம். உயரதிகாரிகளுக்கு வர வேண்டிய லஞ்சத்தொகையை வசூலிச்சு, 'டோர் டெலிவரி' செய்றது, அவருடைய வேலையாம்,''

''மருதமலை ஆண்டவனின் வாகனத்தை பெயரா வச்சிருக்காரே, அவருதானே,'' என, மித்ரா கேட்க, ''யெஸ், கரெக்ட்டா சொல்லிட்டியே,'' என, சித்ரா பாராட்டினாள்.

''அக்கா, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், உரிய கல்வித்தகுதியில்லாத ஒருத்தரு, 28 வருஷமா வேலை செய்றாராம். இது சம்பந்தமா, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒருத்தரு, கேள்வி கேட்டிருக்காரு. கோவில் நிர்வாகம் தரப்பில், சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க. அவரும் பதில் கொடுக்கலையாம்; கேள்வி கேட்டவங்களுக்கும் நிர்வாகம் பதில் அனுப்பாமல் இருக்கு,''

''தகவல் அறியும் உரிமை சட்டம் வந்ததுக்கு அப்புறம்தான், அரசு அதிகாரிகள் செய்ற, தில்லாலங்கடி வேலைகள் வெளிச்சத்துக்கு வருது. இருந்தாலும், சில அதிகாரிகள், பதில் சொல்லாமல், 'எஸ்கேப்' ஆயிடுறாங்க,'' என, மித்ரா சொன்னபோது, ஜெ., படம் அச்சிட்ட பிளக்ஸ் பேனர்கள், கார்ப்பரேஷன் ஆபீசில் இருந்து, வாகனத்தில் அனுப்பப்பட்டன.

அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, கார்ப்பரேஷன் வெப்சைட்டுல மறுபடியும் ஜெ., படத்தை சேர்த்துட்டாங்க,'' என கூறியதும், ''அக்கா, படத்தை சேர்க்குறது இருக்கட்டும்; அவர் போட்ட உத்தரவை அமல்படுத்த மாட்டேங்கிறாங்களே,'' என, புதிர் போட்டாள் மித்ரா.

''என்னப்பா, என்ன விஷயம், எந்த உத்தரவை அமல்படுத்தாமல் இருக்காங்க,''''கார்ப்பரேஷன்ல ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு சுகாதார அலுவலர் நியமிக்கணும். ராமச்சந்திரன், பிச்சுமணி, திருமால், முருகா, சண்முகானந்தன் ஆகிய ஐந்து பேருக்கு பதவி கொடுத்து, முதல்வரா ஜெ., இருந்தபோது, ஆர்டர் போட்டாங்க.

ஆனா, நம்மூர்ல தலைகீழா நடக்குது,''''எம்.ஜி.ஆர்., பெயருங்கிறதுனால, என்னவோ, ராமச்சந்திரனுக்கு மட்டும் பதவி கொடுத்திருக்காங்க. மீதமுள்ள நாலு பேரும், வார்டு வேலையை செய்றாங்க. வார்டு வேலைகளை செய்ய வேண்டிய சுகாதார ஆய்வாளர்கள் குணசேகரன், ராதாகிருஷ்ணன், சந்திரன், லோகநாதன் ஆகிய நாலு பேரும், மண்டல அலுவலர்களா, வாடகை சொகுசு கார்களில் வலம் வந்துக்கிட்டு இருக்காங்க,''

''மறுபடியும் லாட்டரி வியாபாரம் தலைதுாக்க ஆரம்பிச்சிடுச்சாமே,'' என்றபடி, கார்ப்பரேஷன் ஆபீசில் இருந்து, ஸ்கூட்டரில் புறப்பட்டாள் சித்ரா.பின் இருக்கையில் அமர்ந்த மித்ரா, ''ஆமாக்கா, வடவள்ளி, தொண்டாமுத்துார், பூலுவப்பட்டி காய்கறி மார்க்கெட்களை குறிவைத்து, மூணு நம்பர் லாட்டரி விற்பனை அமோகமா நடக்குது,''

''மத்வராயபுரத்தில் ஒருத்தர் வீட்டிலேயே, 'பிரிண்டிங் மெஷின்' வச்சு, மூணு நம்பர் லாட்டரி அச்சடிக்கிறாராம். சுற்றுப்பகுதி முழுவதும் அவருதான் ஏஜன்ட்டா செயல்படுறாராம். ஆளுங்கட்சி பிரமுகர் மற்றும் போலீஸ்காரங்க ஆசி இருக்கறதுனால, தில்லா கல்லா கட்டுறாங்களாம்,''''அப்படியா,'' என, வாயைப்பிளந்த சித்ரா, ஒப்பணக்கார வீதியில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பை பார்த்ததும், ''சரவணம்பட்டி ஸ்டேஷனுக்கு இன்னும் இன்ஸ்., நியமிக்காமல் இருக்காங்க. அதனால, ரோந்து போலீசார், வசூலில் பட்டைய கிளப்புறாங்களாம்,''

''இந்த ஸ்டேஷனுக்கு உட்பட்ட உளவுத்துறை போலீஸ்காரர் ஒருத்தரு, செந்தாம்பாளையத்தில் மூணு கோடி ரூபாய்க்கு வீடு கட்டிட்டு இருக்காராம். எந்தளவுக்கு சம்பாதிக்கிறாங்கன்னு புரிஞ்சுக்குங்க,''

''அதெல்லாம் இருக்கட்டும். ஆளுங்கட்சி வி.ஐ.பி., ரூ.200 கோடி மதிப்புக்கு பண்ணை வீடு கட்டியிருக்காராமே. ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோ, 'வாட்ஸ்அப்'புல வைரலாகிட்டு இருக்கு பார்த்தியா?''

''நானும் பார்த்தேன். வீடியோ உண்மைதான்... ஆனா, அந்த வீடு ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு சொந்தமானதில்லையாம். கேரளா எர்ணாகுளத்துல குருப்பம்பாடிங்கற இடத்துல இருக்காம். ஒரிஜினல் ஓனர் பேரு ரெஜி. இந்த வீட்டோட வீடியோவ, கொஞ்ச நாளைக்கு முன்னாடி கேரளாவுல வைரல் ஆக்கி, நடிகர் மம்மூட்டி வீடுன்னு யாரோ 'டகால்டி' வேல பார்த்து கிளப்பிவிட்டுட்டாங்களாம். ஆடிப்போன, மம்முட்டி தரப்பு மறுத்துச்சொல்ல, அங்குள்ள நியூஸ் பேப்பர்லேயும் செய்தி வெளியாச்சு. இப்ப, இங்க கிளப்பிவிட்டுட்டாங்களாம்; இது, யாரு பார்த்த வேலைன்னு கண்டுபிடிங்கன்னு வி.ஐ.பி., தரப்பு, போலீஸ் கிட்ட சொல்லியிருக்காம்...''

''ஓ... அப்படியா,'' என்ற சித்ரா, ரயில்வே ஸ்டேஷனை கடந்து சென்றபோது, ''வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து, அந்த அதிகாரியை துாக்குனதுக்கு, டென்ஷனாகிட்டாராமே,'' என, 'ரூட்' மாறினாள்.

''அதுவாக்கா, கார்ப்பரேஷன் ஆபீசுல ஒவ்வொரு செக்சனிலும், ஒரு 'வாட்ஸ்அப்' குரூப் வச்சிருக்காங்க. நகரமைப்பு அதிகாரியை மாத்திட்டதால, அந்த குரூப்பில் இருந்து, அவரை நீக்கியிருக்காங்க. உடனே, 'எதுக்காக துாக்குனீங்க; 'ரிசர்வ் சைட்' மீட்குறது; ஆக்கிரமிப்பு அகற்றுவதுன்னு ஏகப்பட்ட வேலை இருக்கு'ன்னு சொல்லியிருக்காரு. அதுக்கு தனியா ஒரு குரூப் உருவாக்கிக்குங்கன்னு சொல்லிட்டாங்களாம். இதனால, அந்த அதிகாரி, கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராம்,''

''அடடா, அப்படியா,'' என்ற சித்ரா, ''அரசியல் மேட்டர் எதுவும் சொல்லலையே,'' என, கிளறினாள்.''தேர்தல் வேலையில் தி.மு.க.,காரங்க, படுதீவிரமா இறங்கிட்டாங்க. 2016 தேர்தலில், கட்சிக்காரங்க உள்ளடி வேலை செஞ்சதுனால, சில தொகுதிகளை தி.மு.க., இழந்துச்சு. அதனால, அதிருப்தியாளர்களை சமாளிக்கற வேலையில் ஈடுபட்டு இருக்காங்க,''

''இதுக்கு முன்னாடி நிர்வாகிகளா இருந்த முத்துசாமி, நாச்சிமுத்து, வீரகோபாலுக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுத்திருக்காங்க. மாவட்ட பொறுப்பு கொடுத்தா, மறுபடியும் பஞ்சாயத்து வரலாம்ங்கிறதுக்காக, மாநில பொறுப்பு கொடுத்திருக்காங்க,''''அப்ப, அடுத்த வருஷம் நடக்கப் போற தேர்தல்ல, 'பலம்' காட்டுவாங்கன்னு, நெனைக்கிறீயா,''

''அக்கா, அதெல்லாம் இப்பவே, உறுதியா சொல்ல முடியாது. இன்னும் இரண்டு மாசம் போகணும்; கூட்டணி இறுதியான பிறகே, பலம், பலவீனத்தை எடை போடலாம்,''''பார்க்கலாம், என்ன நடக்கப் போகுதுன்னு,'' என்றபடி, ரேஸ்கோர்ஸ் சுற்று வட்டச்சாலைக்குள் ஸ்கூட்டரை செலுத்தினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X