சென்னை: அதிமுக வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதன்முறையாக வழிக்காட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இல்லாத ஒரு குழு தற்போதுதான் அமைக்கப்படுகிறது.
ஜெ., மறைவுக்குப்பின் சசிகலா சிறைக்கு சென்றதால் முதல்வர் பழனிசாமி, பிரிந்து சென்ற பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைத்து துணை முதல்வர் பொறுப்பும் வழங்கி சுமுகமாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் ? கட்சியில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற குரல் உள்ளிட்டவைகளால் அதிமுகவில் சமீபத்தில் குழப்பம் ஏற்பட்டது.
இதனையடுத்து பழனிசாமி, பன்னீர்செல்வம் இடையே பிளவு ஏற்பட்டதாக செய்தி கிளம்பியது. இந்நிலையில் கட்சியில் வழிகாட்டுக்குழு அமைக்க வேண்டும் என பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். இது தொடர்பாக அமைச்சர்கள் குழுவினர் பேச்சு நடத்தினர். இதனையடுத்து வழிக்காட்டுக்குழு அமைக்க முடிவு ஏற்பட்டுள்ளது. இந்த வழிக்காட்டுகுழு என்பது மிக அதிகாரமிக்க கமிட்டி ஆகும்.
இந்தக்குழுவில் இடம் பெறுவோர் எடுக்கும் முடிவுகளை கட்சியை வழிநடத்தும். அதிமுகவை நிறுவிய எம்.ஜி.ஆர்., தொடர்ந்து கட்சியின் பொதுசெயலராக இருந்த ஜெயலலிதா காலத்தில் இந்தக்குழு என்பது கட்சியில் இல்லாமல்தான் இருந்தது. தற்போது வழிக்காட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்சிகளில் கமிட்டிகள்
வழிக்காட்டுக்குழு என்பது இந்தியாவில் உள்ள முக்கிய அனைத்துக்கட்சிகளிலும் வேறு, வேறு பெயர்களில் உள்ளன. அதாவது பா.ஜ.,வை பொறுத்தவரை மையக்குழு என்றும் , காங்கிரசில் காரியக்கமிட்டி என்றும், கம்யூனிஸ்ட் கட்சியில் பொலிட்பீரோ, திமுகவில் உயர் செயல்திட்டக்குழு என்றும் அமைப்புகள் உள்ளன. இந்த கமிட்டி கட்சியின் அதிகார மையமாக இருக்கும். நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர்கள் தேர்வு என எதுவாக இருந்தாலும் கட்சியின் இறுதி முடிவாகவும் இருக்கும்.