புதுடில்லி: தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கவோ அல்லது போராட்டம் நடத்தவோ பொது இடத்தை மறிக்கவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டில்லியையும் நொய்டாவையும் இணைக்கும் பகுதியான ஷாகீன்பாக்கில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தால், அப்பகுதி மக்களுக்கு இடையூறாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரே ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்தது. இந்த குழுவினர், போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த பேச்சுவார்த்தையில் பரிமாறி கொள்ளப்பட்ட விவரங்கள் குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், நீதிபதிள் எஸ்.கே.கவுல், அனிருத்தாபோஸ், கிருஷ்ணா முராரே ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: போராட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் தான் போராட்டம் நடக்க வேண்டும். மற்ற இடங்களில் நடக்கும் போராட்டங்களை அதிகாரிகள் அகற்ற வேண்டும். போராட்டம் என்ற பெயரில், பொது இடங்கள் அல்லது சாலைகளை ஆக்கிரமித்தால், அது ஏராளமான பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும். அவர்களின் உரிமையை மீறும். இதற்கு சட்டத்தில் இடமில்லை. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது என்பது அரசியல்சாசனம் வழங்கிய உரிமை. அதனை நாம் மதிக்க வேண்டும். ஆனால், அது மக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது. தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கவோ அல்லது போராட்டம் நடத்தவோ, பொது இடங்களை ஆக்கரிமிப்பதையோ அல்லது மறிப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தனர்.