சென்னை : அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையேயான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி கிடைத்ததோடு, இந்த விஷயம் டுவிட்டரில் இன்று(அக்., 7) டிரெண்ட் ஆனது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அரசியல் கட்சியினர் இப்போதே தயாராகி வருகின்றனர். ஆளும் அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே போட்டி எழுந்தது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் ஆதரவு எம்எல்ஏ.,க்களுடனும் தனித்தனி அணியாக உருவாகி ஆலோசனை நடத்தினர். மேலும், அமைச்சர்களும் இருவருடனும் மாறி மாறி ஆலோசனை நடத்தியதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இருவரையும் கட்சி நிர்வாகிகள் சமரசம் செய்தனர்.

இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பை இன்று வெளியிடுவதாக அதிமுக., கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு ஒன்றை அமைத்துள்ளதாக அறிவித்தனர். அதோடு 2021 தேர்தலில் முதல்வராக பழனிசாமி முன்னிறுத்தப்படுவதாக துணை முதல்வர் பன்னீர் செல்வம் அறிவித்தனர்.
இதை அதிமுக.,வினர் வரவேற்றனர். இதன்மூலம் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் இடையேயான சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. தொடர்ந்து அதிமுக., கட்சியினர் சமூகவலைதளங்களில் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

''சாமானியனும் ஆட்சி செய்யலாம் என அதிமுக.,வில் உறுதி செய்யப்பட்டுள்ளது, நம்மில் ஒருவர் நமக்கான தலைவர், நம்மவர், நமக்கானவர்'' என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #EPSforTN, #EPSFOR2021, #AIADMK, #CMCandidate, #OPSvsEPS ஆகிய ஹேஷ்டாக்குகள் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகின.