வாஷிங்டன்: கொரோனாவில் இருந்து அதிபர் டிரம்ப் முழுமையாக குணமடையாவிட்டால் அவருடனான நேரடி விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலின்போது, தங்கள் கொள்கைகள், சாதனைகள், திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து, இரண்டு கட்சியின் வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதம் நடத்துவர். அதிபர் வேட்பாளர்கள் 3 முறையும், துணை அதிபர் வேட்பாளர்கள் ஒரு முறையும் விவாதம் நடத்துவர்.

அந்தவகையில் ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் நடைபெற்ற முதல் விவாதத்தில் டிரம்ப், ஜோ பிடன் ஆகியோர் மாறி மாறி குற்றம் சாட்டினர். காரசாரமாக நடைபெற்ற இந்த விவாதம் முடிந்த சில நாட்களில் டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், 4வது நாளிலேயே வெள்ளை மாளிகை திரும்பினார். கொரோனா குணமாகாமல் விரைவாக டிஸ்சார்ஜ் ஆனது குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில், வரும் 15ம் தேதி நடைபெற உள்ள அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் உடனான 2ம் கட்ட நேரடி விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் விருப்பம் தெரிவித்தார். இது குறித்து பேசிய ஜோ பிடன், டிரம்ப் உடனான விவாதத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும், ஆனால் அவர் கொரோனாவில் இருந்து மீளாத பட்சத்தில் விவாதத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.