புதுடில்லி: ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்து அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் இரண்டாவது பட்டியல், மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள், கறுப்பு பணத்தை பதுக்குவோரின் சொர்க்கமாக திகழ்கின்றன. இந்த வங்கிகளில் கணக்கு துவங்குவதற்கு, கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுவது இல்லை.
தகவல் பரிமாற்ற ஒப்பந்தம்
இதனால், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கறுப்பு பண முதலைகள், ஏதாவது ஒரு அடையாளத்தின் அடிப்படையில் கணக்கு துவங்கி, தங்கள் சொந்த நாட்டில் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக, இந்த வங்கிகளில் பணத்தை பதுக்குகின்றனர். நம் நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர், சுவிஸ் வங்கி களில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அரசு பொறுப்பேற்றது முதல், இந்த கறுப்பு பணத்தை மீட்கவும், பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன் ஒரு பகுதியாக, இந்தியா -- சுவிட்சர்லாந்து இடையே, தன்னிச்சை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. சுவிட்சர்லாந்தின் பெடரல் வரி நிர்வாகத்துக்கும், 75 நாடுகளுக்கும் இடையே, கடந்த ஆண்டு ஒப்பந்தம் நிறைவேறியது.இதையடுத்து, சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்போரின் முதல் பட்டியல், கடந்த ஆண்டு, செப்டம்பரில் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
எண்ணிக்கை உயர்வு
இந்நிலையில், இந்தியா -- சுவிஸ் ஒப்பந்தப்படி, இரண்டாவது பட்டியல், நேற்று ஒப்படைக்கப்பட்டது. இந்த முறை, ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை, 86 ஆக உயர்ந்துள்ளது.மொத்தம், 31 லட்சம் வங்கி கணக்குகளின் விபரங்கள், சம்பந்தப்பட்ட நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பெடரல் வரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதில், இந்தியர்களின் பட்டியல் குறித்து தனியாக விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனாலும், 31 லட்சம் வங்கி கணக்குகளில், இந்தியர்களின் பெயர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.