
சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மலர்ச்சி பெற்று வருகிறது என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம்தான் கந்த பிரசாத்-பாமினி தேவி என்ற வயதான தம்பதியினர்.

தெற்கு டில்லியின் மால்வியா நகர் நடைபாதையில் உள்ளது ‛பாபா கா தாபா' என்ற சிறிய உணவகம்.சப்பாத்தி,சாப்பாடு என்று பலவித உணவுகள் உண்டு.இதன் உரிமையாளரான 80 வயது கந்த பிரசாத்தும் அவரது மனைவி பாமினி தேவியும்தான் சமைப்பது, பரிமாறுவது, சுத்தம் செய்வது என்று எல்லா வேலைகளையும் பார்த்து வருகின்றனர்.

காலை 6 மணிக்கு கடையை திறந்தால் மதியம் 2 மணி வரை கடை திறந்திருக்கும்.ஒரு நாள் முழுவதும் வியாபாரமானால் செலவு போக எண்பது ரூபாய் லாபம் கிடைக்கும்.ஆனால் கொரேனாவால் குறைந்து போன நடமாட்டம் காரணமாகவும் ஒரு நாளைக்கு 60 ரூபாய்க்கு கூட உணவு பொருட்கள் விற்பனையாவதில்லை, செய்த உணவுப் பொருட்கள் எல்லாம் வீணாகி நட்டம்தான் ஏற்பட்டது.
உழைக்க தயராக இருந்தாலும் எங்களால் தொடர்ந்து பிழைக்க முடியாத நிலை என்று கடைக்கு வந்த வாடிக்கையாளர் சவுரவ் என்பவரிடம், கந்த பிரசாத் கண்ணீருடன் தனது நிலையை பகிர்ந்து கொண்டதுடன் விற்காமல் மீந்து போயிருக்கும் பொருட்களையும் காண்பித்திருக்கிறார்.
கந்த பிரசாத்தின் கண்ணீர் பேட்டியை அப்போதே சமூக வலைதளங்களில் பதிவிட்டார் இவரது பதிவு வைரலாகியது கிரிக்கெட் வீரர்கள் அரசியல் பிரமுகர்கள் சினிமா நட்சத்திரங்கள் என்று பலரும் கந்த பிரசாத் தம்பதிக்கு உதவ முன்வந்ததுடன் மற்றவர்களையும் உதவி செய்ய கேட்டுக் கொண்டனர்.
மறுநாள் காலை கடையை திறந்த கந்த பிரசாத்திற்கு பெரிய ஆச்சர்யம் கடை வாசலில் ஒரு பெரிய வரிசை காத்திருந்தது சமைத்த உணவுகள் எல்லாம் ஒரு மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது பத்து ரூபாய்க்கு சாப்பிட்டவர்கள் எல்லாம் நுாறு ரூபாய் கொடுத்து மீதம் வேண்டாம் எங்கள் சிறிய பங்களிப்பு மற்றும் அன்பளிப்பு என்று என்று வாழ்த்திவிட்டு சென்றனர் நிறைய பேர் அரிசி பருப்பு என்று உணவுப்பொருளாகவும் தந்து உதவி வருகின்றனர்.
இங்கே முப்பது வருடமாக இந்த கடையை நடத்திவருகிறேன் என்றைக்காவது ஒரு நாள் என் உணவின் தரத்தையும் ருசியையும் பார்த்து நிறைய பேர் வாசலில் வந்து வரிசைகட்டி நிற்பர் சமைத்த உணவுகள் எல்லாம் தீர்ந்து போய் காலியான பாத்திரங்களிலும் எங்கள் மனதிலும் மகிழ்ச்சியை நிரப்பிவைப்பேன் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன் அந்த கனவு இப்போதுதான் நிறைவேறியுள்ளது.தினமும் இப்போது என் கடைக்கு வரும் கூட்டத்தைப் பார்த்தால் இந்தியாவே என் பக்கம் பாசமும் நேசமும் காட்டி இருப்பதாக உணர்கிறேன்.
கடவுள் எப்போதுமே நம் கோரிக்கையை எப்படியும் நிறைவேற்றிவைப்பார் ஆனால் அது எப்போது என்பதுதான் யாருக்கும் தெரியாது எனக்கு 80 வயதில் நிறைவேற்றி வைத்துள்ளார் இனி மிஞ்சியுள்ள நாட்களை மிகவும் மகிழ்ச்சியாக கழிப்பேன் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது என்கிறார் ஆனந்த கண்ணீருடன்.
ஜொமோட்டோ உணவு விநியோக நிறுவனம் தனது பட்டியலில் பாபா கா தாபா என்ற கந்த பிரசாத்தின் உணவகத்தையும் சேர்த்துக் கொண்டு உள்ளதுடன் தனது நிறுவன ஊழியர்கள் சிலரையும் கந்த பிரசாத்தின் கடைக்கு சேவை செய்ய அனுப்பிவைத்துள்ளது.
நண்பர்களே பெரியோர்களே இதைப் படித்ததும் நாமும் இந்தகந்த பிரசாத் தம்பதிக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று எண்ணுகிறீர்களா? நல்லது இதற்காக டில்லி வரை போக வேண்டாம் கொஞ்சம் கவனித்து பார்த்தீர்கள் என்றால் நமக்கு பக்கத்திலேயே நிறைய ‛கந்த பிரசாத்' போன்றவர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு உதவினாலே கந்த பிரசாத்திற்கு உதவியது போலத்தான்.
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE