சென்னை: 'முதலீடுகள், வேலை வாய்ப்புகள், கொரோனா கொள்முதல்கள் குறித்து, தனித்தனியாக வெள்ளை அறிக்கைகளை, அரசு வெளியிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:'அரசு எடுத்த முயற்சிகளால், தமிழகம், நாட்டின் முக்கிய முதலீட்டு மையங்களில் ஒன்றாக மாறியுள்ளது' என, முதல்வர் இ.பி.எஸ்., பாராட்டு பாத்திரம் வாசிக்கிறார். இது, கானல் நீரில் விண் மீன்களைப் பிடித்து விட்டேன் என்ற, கற்பனையை விஞ்சுவதாக இருக்கிறது.தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 6.46 லட்சத்தை தாண்டி விட்டது.அ.தி.மு.க., ஆட்சியில், மாநிலத்தின் கடன், 4.56 லட்சம் கோடி ரூபாயை தாண்டி, இந்த ஆண்டில் மேலும், 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது.
போதாக்குறைக்கு மவுனமாக இருந்து, 'சந்தையில் இன்னும் கடன் வாங்கிக் கொள்கிறோம்' என, ஜி.எஸ்.டி., கவுன்சிலில், மாநிலத்தின் நிதி உரிமையை, 'சரண்டர்' செய்திருக்கிறார் முதல்வர். அ.தி.மு.க., ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஊழல் சுரங்கமான, கொரோனா கொள்முதல்கள் குறித்தும் தனியாக, ஒரு வெள்ளை அறிக்கையை, மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டக்கல்வி இடஒதுக்கீடு
மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலுக்கு, லோக்சபா தி.மு.க., தலைவர் டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதம்:
தேசிய சட்ட பல்கலைகள், சட்டப் படிப்புகளில், அனைத்து இந்திய இடங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு, ௨௭ சதவீத இடங்களும், மாநில இடங்களில், அந்தந்த மாநிலங்களின் உத்தரவுப்படியும், இட ஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்ற வேண்டும். திருச்சி உள்ளிட்ட மத்திய சட்ட பல்கலைகளில், இதர பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இது குறித்து, தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் எச்சரித்த நிலையில், தொடரும் விதிமீறலில், தாங்கள் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.