...

சென்னையில் முதன் முதலாக ஆதரவற்ற பெண்களுக்கான முதியோர் இல்லம் துவங்கி அடுக்கடுக்கான சேவைகளில் ஈடுபட்டுவந்த சாவித்ரி அம்மா என்ற அன்பு விளக்கு அணைந்தது.
மற்றவர்களுக்கு உதவுவதுதான் வாழ்க்கை என்று சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்ட சாவித்திரி வைத்தி தனது 16 வயதிலேயே சமூக சேவைகளில் இறங்கினார்.

இவர் வளர வளர இவருக்குள் இருந்த மனித நேயமும் ஏழை எளிய சமூகத்தின் மீதான அன்பும் சேர்ந்தே வளர்ந்தது.தோழிகளுடன் சேர்ந்து ‛திங்கள் அறக்கட்டளை' என்ற அமைப்பை 1974 ம் ஆண்டு துவங்கினார்.அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது உறுப்பினர் கட்டணத்தை எடுத்துக் கொண்டு போய் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கிவந்தனர்.
குடும்பத்திற்காக எத்தனையோ தியாகம் செய்த பெண்களை வயதான காலத்தில் பிள்ளைகள் மட்டுமல்ல ஆதரவற்ற இல்லங்கள் கூட சேர்த்துக் கொள்ளாமல் அன்றைய காலகட்டத்தில் புறக்கணித்து வந்தனர்,இதைக் கவனித்த சாவித்ரி ஏன் நாமே ஆதரவற்ற பெண்களுக்கான முதியோர் இல்லம் துவங்கக்கூடாது என்று நினைத்தார்.
நானே என்று நினைக்காமல் நாமே என்று நினைத்ததால் தோழியர் கைகொடுக்க வாடகை வீட்டில் முதியோர் இல்லம் துவங்கியது.நன்கொடை வந்ததோ இல்லையோ ஆதரவற்ற பெண்கள் நிறைய பேர் இல்லம் தேடி வந்தனர் வந்தவர்களை நல்ல உள்ளத்துடன் அரவனைத்துக் கொண்டார் சாவித்ரி.
ஏவிஎம் ராஜேஸ்வரி ஒரு ஏக்கர் நிலம் நன்கொடையாக கொடுக்க அந்த இடத்தில் ஹெல்பேஜ் இன்டியா கட்டிடம் கட்டி கொடுக்க சென்னை பாலவாக்கத்தில் பெண்களுக்கான முதல் முதியோர் இல்லம் 1978 ல் துவங்கப்பட்டது,விஸ்ராந்தி இல்லம் என்றும் பெயரிடப்பட்டது.அன்று முதல் இன்று வரை நாட்டில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், உத்வேகமாகவும் இந்த இல்லம்தான் இப்போதும் விளங்கிவருகிறது.
அறுபது வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழை எளிய ஆதரவற்ற பெண்கள் மட்டுமே தங்கக்கூடிய இந்த இல்லத்தில் உணவு உடை மருத்துவம் என்று எல்லாமே இலவசம்தான்.உணவு உடையைவிட இங்கு காட்டப்படும் அன்புதான் வந்தவர்களை பெரிதும் மகிழ்வித்தது, நீண்ட காலத்திற்கு பிறகு முகத்தில் சிரிப்பை வரவழைத்தது. அறுபதில் இருந்து 103 வயது வரையிலானவர்கள் கூட ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வலம்வருகின்றனர்.
நிறைய செலவாகுமே எப்படி சமாளிப்பார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க நல்ல விஷயத்திற்கு எப்போதுமே ஆதரவு கிடைக்கும் என்பதற்கு ஏற்ப இவருக்கு பல பக்கங்களில் இருந்தும் ஆதரவு கிடைத்தது. இதன் காரணமாக ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்பு செலவை ஏற்பது,வீட்டில் தனிமையாக இருக்கும் வயதானவர்களுக்கு உணவு அனுப்புவது,மருத்துவ சேவை தேவைப்படுபவருக்கு நியாயமான கட்டணத்தில் உயர்மருத்துவம் வழங்குவது என்று சாவித்ரியின் சேவை விரிந்தது.
இல்லத்தில் இருப்பவர்களை இருக்கும் போது போது எப்படி தாயன்புடன் பார்த்துக் கொண்டாரோ அதே போல இறந்த போதும் அதே உற்ற உறவாக இருந்து அந்திம காரியங்களை முன்னின்று செய்தார்.
எந்தவித விளம்பர விருப்பங்களையும் விரும்பாமல் தன் கடன் ஆதரவற்ற பெண்களுக்கு பணி செய்து கிடப்பதே என தனது வாழ்வின் பெரும்பகுதியை கடந்தவரும் ‛சாவித்ரி அம்மா' என்று எல்லோராலும் பாசத்துடனும் அழைக்கப்பட்ட இந்த அன்பு விளக்கு தனது 90 வயதில் நேற்று முன்தினம் அணைந்து போனது.
'புரந்தார் கண் நீர் மல்கச் சாகிற்பின் சாக்காடு,இரந்து கோள்தக்க துடைத்து' என்பதையே தன் வாழ்வின் செய்தியாக விட்டுச்சென்றுள்ள அம்மையாருக்கு சிரம் தாழ்ந்த அஞ்சலி.
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE