வராண்டாவில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை வாசித்துக் கொண்டிருந்தாள் சித்ரா. மொட்டை மாடியில், 'வாக்கிங்' சென்ற மித்ரா, கீழிறங்கி வந்ததும், ''என்னக்கா, பேப்பர்ல ஏதாச்சும் ஸ்பெஷல் நியூஸ் இருக்கா,'' என, பேச்சை துவக்கினாள்.
''வெளியூர் நியூஸ் இருக்கட்டும். நம்மூர் ஆளுங்கட்சி தரப்புல, எம்.எல்.ஏ., கனவுல இருக்கறவங்க, 'சீட்' வாங்குறதுக்கு முயற்சி பண்ணிட்டு இருக்காங்க''
''தீபாவளிக்கு ரூ.2,000 கொடுக்கப் போறாங்களாமே, உண்மைதானா,''
''நானும் கேள்விப்பட்டேன். 'கொரோனா' நிதியில் கொடுக்கப் போறாங்களாம். இன்னொரு சர்ப்ரைஸ் என்னான்னா, தை பொங்கலுக்கு அஞ்சாயிரம் கொடுக்கறதுக்கும், 'பிளான்' வச்சிருக்காங்களாம்,''
''அடடே... அப்படியா,'' என்ற மித்ரா, ''கோவை தெற்கு தொகுதியையும், சூலுார் தொகுதியையும் எப்படியாவது வாங்கிடணும்னு, காங்கிரஸ்காரங்க நெனைச்சுக்கிட்டு இருக்காங்க,'' என்றாள்.
''காங்கிரசுக்கு கொடுக்க வாய்ப்பில்லைன்னு தோணுது. தி.மு.க., தரப்பிலும், சூலுாரை சேர்ந்த மூணு பேரும், சுல்தான்பேட்டையை சேர்ந்த ஒருவரும், 'சீட்' ரேசில் இருக்காங்களாம்,''
''ஆளுங்கட்சி தரப்புல வி.ஐ.பி., நிக்கப் போறதாச் சொல்லியிருக்கறதுனால, கட்சிக்காரங்க அமைதியா இருக்காங்க. ஆனா, தே.மு.தி.க., ஏற்கனவே ஜெயிச்ச தொகுதிங்கிறதுனால, மறுபடியும் களமிறங்கறதுக்கு தயாரா இருக்காங்களாம். மாவட்ட நிர்வாகியும், ஒன்றிய நிர்வாகியும் 'சீட்' வாங்குறதுக்கு, காய் நகர்த்திட்டு இருக்காங்களாம்,''
''சரி, சரி...தெற்கு தாலுகா ஆபீஸ் வரைக்கும் போகணும், நீயும் வர்றீயா,'' என, கேட்டாள்.
''இதோ வந்துட்டேன்,'' என்றபடி, முக கவசம், கையுறை அணிந்து கொண்டு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் மித்ரா.
பின் இருக்கையில் அமர்ந்து கொண்ட சித்ரா, ''மித்து, தெற்கு தாலுகா ஆபீசுல நடந்த வசூல் வேட்டையை சொல்றேன், பொறுமையா இருக்கணும்,'' என்றாள்.
''ம்ம்ம்...சொல்லுங்க,'' என்றபடி, கூர்ந்து கேட்க ஆரம்பித்தாள்.
''நம்மூரு கலெக்டர் ஆபீசுல, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டராக இருந்த லேடி அதிகாரி, இப்போ, சென்னையில் டி.ஆர். ஓ., அந்தஸ்துல இருக்காங்க. அவரது நெருங்கிய உறவினர், வாரிசு சான்று வாங்கணும்னு சொல்லியிருக்காரு,''
''உடனே லேடி அதிகாரி, இங்கு வேலைபார்த்தபோது, உதவியாளரா இருந்தவரிடம் சொல்லியிருக்கார். அவர், தாலுகா ஆபீசுக்கு நேர்ல போயி, மேடத்துக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லியிருக்காரு,''
''அதுக்கு உடனே, வாரிசு சர்ட்டிபிகேட் கெடைக்கறது அந்தக்காலம். இறந்து ரொம்ப வருஷம் ஆச்சுன்னு சொல்றீங்க; செலவு செய்யாம சர்ட்டிபிகேட் வாங்குறது கஷ்டம்னு சொல்லியிருக்காங்க,''
''சரி, பரவாயில்லை; எவ்ளோ செலவாகும்னு கேட்டதும், மேடத்திடம் சொல்லக் கூடாதுன்னு, உறுதிமொழி வாங்கிட்டு, ரூ.20 ஆயிரத்தை கறந்துட்டாங்களாம். பணம் கைமாறியதும், ஒரே நாளில் சர்ட்டிபிகேட் கொடுத்துட்டாங்களாம்,''
''அடப்பாவமே,'' என்றாள் மித்ரா.
''மித்து, பொறுமையா கேளு. சர்ட்டிபிகேட் வாங்கிய குடும்ப நண்பர், லேடி அதிகாரியிடம் நடந்த விஷயத்தை அப்படியே கக்கிட்டாராம். கொதிச்சு போன அந்த அதிகாரி, நம்மூர் அதிகாரியை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியிருக்காங்க. துறை ரீதியா விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு,'' என்ற படி, தாலுகா அலுவலகம் முன், ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினாள் மித்ரா.
அருகில் உள்ள பேக்கரிக்கு, இருவரும் நடந்து சென்றனர். ''கார்ப்பரேஷன்ல குப்பை ஊழல், டீசல் ஊழல் மாதிரி, கம்ப்யூட்டர் வாங்கியதிலும் முறைகேடு நடந்திருக்குறதா சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். டெண்டர் முறையை கையாளாமல், உள்ளூர் விலை பட்டியலை அடிப்படையா வச்சு, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம், 40 லட்சம் ரூபாய்க்கு கம்ப்யூட்டர், பிரிண்டர் வாங்கியிருக்காங்க. இதுக்கு, குடிநீர் பிரிவில் இருந்து, பில் தயாராகி போயிருக்கு,''
''மித்து, வழக்கமா, இன்ஜினியரிங் செக்சன்காரங்கதானே, எந்த பொருளா இருந்தாலும் கொள்முதல் செய்வாங்க,''
''அதுலதான், சூட்சுமம் இருக்கு. பழைய கமிஷனர் உத்தரவுப்படி, குடிநீர் பிரிவில் இருந்து பில் அனுப்பியிருக்காங்க. இரண்டு வருஷ கோப்புகளை அலசி ஆராய்ந்தால், முறைகேடு நடந்திருக்கான்னு கண்டுபிடிக்கலாம்னு சொல்றாங்க,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் மித்ரா.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை பார்த்த சித்ரா, ''போலீஸ்காரங்களுக்காக, சிட்டிக்குள்ள ஏகப்பட்ட இடத்துல அடுக்குமாடி குடியிருப்பு இருக்கு. காந்திபுரத்துல புதுசா கட்டுன குடியிருப்புல ஒதுக்கீடு வாங்குறதுக்கு ஏகப்பட்ட போட்டியாம்,''
''அப்புறம், என்னாச்சு, குலுக்கல் நடத்துனாங்களா,''''குலுக்கல் நடந்திருந்தா, பரவாயில்லையே! தரைத்தளம்னா, 10-12 ஆயிரம், முதல் தளம்னா, அஞ்சாயிரம்னு, கரன்சி கைமாறியிருக்கு. வேற குடியிருப்புல இருக்கறவங்களும், இட பெயர்ச்சியாகுறதுக்கு கரன்சி வாங்கியிருக்காங்க. பணம் கொடுக்காதவங்களுக்கு இரண்டாவது, மூன்றாவது தளங்களில் ஒதுக்கியிருக்காங்க,''
''போலீஸ்காரங்களிடமே வசூல் வேட்டை நடத்தி இருக்காங்களா, வெளங்கிடும்,'' என்ற மித்ரா, எஸ்.பி., ஆபீசை கடந்தபோது, ''நானும் ஒரு போலீஸ் மேட்டர் வச்சிருக்கேன், சொல்லட்டுமா,'' என, கேட்டாள்.
''சொல்லு, பார்க்கலாம்,''
''ஆலாந்துறை ஸ்டேஷனை சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் ஒருத்தரு, கொரோனா தொற்று உறுதியாகி, விடுப்பில் இருக்காரு. அவரு, ஜாகிர்நாயக்கன்பாளையம் தி.மு.க., கவுன்சிலர் வீட்டுக்கு போயி, கொடுக்கல் - வாங்கல் பிரச்னை சம்பந்தமா பஞ்சாயத்து பேசி, கடுமையா தாக்கிட்டாராம்; கவுன்சிலர், ஜி.எச்.,ல டிரீட்மென்ட்டுல இருக்காரு. எஸ்.பி., யிடம் தி.மு.க.,காரங்க புகார் மனு கொடுக்கப் போறாங்களாம்,'' என, மித்ரா சொன்ன போது, மொபைல் போன் சிணுங்கியது.
அழைப்பை ஏற்ற மித்ரா, ''ஏன் 'காளி', உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. ஏற்கனவே ஒரு தடவை பிரச்னையில் சிக்குனதை மறந்துட்டியா,'' என, 'அட்வைஸ்' செய்து, இணைப்பை துண்டித்ததும், லங்கா கார்னர் வழியாக, கார்ப்பரேஷன் அலுவலகத்துக்கு ஸ்கூட்டரை முறுக்கினாள்.அப்போது, கார்ப்பரேஷன் டவுன் பிளானிங் ஆபீசர் ஜீப், அவர்களை கடந்து சென்றது.
அதை கவனித்த சித்ரா, ''மித்து, விண்ணப்பிச்ச மூணு நாளில், கட்டட வரைபட அனுமதி கெடைக்கும்னு சொல்லியிருக்காங்களே, கிடைக்குமா,'' என, அங்கலாய்ப்புடன் கேட்டாள்.
''ஆமாக்கா, அப்படித்தான் சொல்றாங்க! ஆனா, செய்றாங்களான்னு பொறுத்திருந்து பார்க்கணும். ஏன்னா, திருப்பூர் கலெக்டரா இருக்கற விஜயகார்த்திகேயன், கமிஷனரா இருந்தப்ப, 'எக்ஸ்பிரஸ் அப்ரூவல்'ங்கிற திட்டத்தை கொண்டு வந்தாரு; அதாவது, ஒரே நாள்ல அப்ரூவல் கொடுக்குற ஸ்கீம். ஆனா, ஒரு நாள் கூட, செயல்படுத்த விடாம தடுத்துட்டாங்க,''
''டவுன் பிளானிங் அப்ரூவல் விஷயத்துல, கார்ப்பரேஷன் அதிகாரிகளில் சிலர், கரன்சி குளியல் குளிக்கிறாங்க,''
''ஆமா, மித்து! உதவி நகரமைப்பு அதிகாரி ஒருத்தருக்கு, லஞ்சம் வாங்கிக் கொடுக்கற ஒருத்தரு, செட்டிபாளையம் ஏரியாவுல இரண்டு வீடு கட்டியிருக்காராம். அப்போ, லஞ்சம் வாங்குற அதிகாரி, எவ்ளோ சம்பாதிப்பாருன்னு பார்த்துக்கோயேன்,''
''ஒங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா,'' என்றபடி, கார்ப்பரேஷன் வளாகத்துக்குள் ஸ்கூட்டரை நிறுத்தினாள் மித்ரா.
''என்னாச்சுப்பா, என்ன விஷயம்,'' என, சித்ரா ஆர்வமாக கேட்க, ''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, பில் கலெக்டர்களை, வெவ்வேறு மண்டலத்துக்கு மாத்துனாங்க. அரசியல் அழுத்தம் கொடுத்து, மீண்டும் பழைய இடத்துக்கே வரலாம்னு, சில பேரு, பொறுப்பேற்காம இருந்தாங்க,''
''இதை தெரிஞ்சுக்கிட்ட உயரதிகாரிகள், வரித்தொகையை முறைகேடு செய்த ஊழியருக்கு, டிச்சு வழிக்கிறதை மேற்பார்வை செய்ற வேலை கொடுத்திருக்காங்க. இதை கேள்விப்பட்ட பில் கலெக்டர்கள் ஆடிப்போயிட்டாங்களாம். கொடுத்த வேலையை செய்யலைன்னா, குப்பை அள்ள போக வேண்டியிருக்கும்னு சொல்லியிருக்காங்களாம்,'' என்றபடி, மூலிகை உணவகத்துக்குள் நுழைந்தாள் மித்ரா.