புதுடில்லி : 'ஜம்மு -- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறிய கருத்து, தேச விரோதமானது' என, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.

டில்லியில் நேற்று, பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:'ஜம்மு -- காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான, சட்டப்பிரிவு, 370 ரத்து செய்யப்பட்டதை, சீனாவின் உதவியுடன் மீட்போம்' என, ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, 'டிவி' பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வேதனை : இதன் வாயிலாக, அவர் சீனாவின் ஆதரவாளராக உருவெடுத்துள்ளார். மேலும், கிழக்கு லடாக் எல்லையில், சீனாவின் அத்துமீறலை நியாயப்படுத்தி பேசியுள்ளார். ஜம்மு -- காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தற்போதைய, எம்.பி.,யுமாக இருக்கும் ஒருவர், சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக பேசுவது வேதனை அளிக்கிறது.ஆளும் கட்சியை விமர்சிக்கும் உரிமை, எதிர்க்கட்சியினருக்கு உள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மீது இருக்கும் வெறுப்புணர்வால், சொந்த நாட்டுக்கு எதிரான, தேச துரோக கருத்தை, ஒரு எம்.பி., தெரிவிப்பது முறையல்ல.
வேடிக்கைவரலாற்றை புரட்டி பார்த்தால், இது போன்ற கருத்துக்களை, ராகுலும் அவ்வப்போது கூறி வருகிறார். இருவரும், ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.பாலகோட் தாக்குதலை கேள்விக்கு உட்படுத்திய போது, பாகிஸ்தானில் ராகுல், 'ஹீரோ'வாக பார்க்கப்பட்டார்.இவ்வாறு, அவர் கூறினார்.எல்லையில், சீன ஆக்கிரமிப்புக்கு, காங்., தலைவர்கள் ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனாவின் அத்துமீறலை, காங்., எப்போதும் வேடிக்கை பார்ப்பதையே, வாடிக்கையாக வைத்துள்ளது.

காங்., துாண்டி விடுவதன் காரணமாகவே, பரூக் அப்துல்லா, இது போன்ற சர்ச்சை கருத்துக்களை பேசி வருகிறார்; இதன் பின்னணியில் காங்கிரஸ் இருக்கிறது என, அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE