சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் பொறியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

Updated : அக் 16, 2020 | Added : அக் 15, 2020 | கருத்துகள் (87)
Share
Advertisement
வேலுார் :ராணிப்பேட்டையில் உள்ள, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பன்னீர்செல்வம் வீட்டில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நடத்திய, 19 மணி நேர சோதனையில், கணக்கில் வராத, 3.25 கோடி ரூபாய் பணக் குவியல், 3.6 கிலோ தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 90 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இவ்வளவு பணத்தையும் அதிகாரிக்கு அள்ளி வீசியவர்கள் யார்
சுற்றுச்சூழல் முதன்மை பொறியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

வேலுார் :ராணிப்பேட்டையில் உள்ள, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பன்னீர்செல்வம் வீட்டில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நடத்திய, 19 மணி நேர சோதனையில், கணக்கில் வராத, 3.25 கோடி ரூபாய் பணக் குவியல், 3.6 கிலோ தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 90 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இவ்வளவு பணத்தையும் அதிகாரிக்கு அள்ளி வீசியவர்கள் யார் என்பதும், அதற்கு அதிகாரி செய்த பிரதியுபகாரம் குறித்தும், விசாரணை நடக்கிறது. இந்த சோதனை வாயிலாக, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் நடைபெறும், ஊழல், முறைகேடுகள் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

வேலுார் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரியை சேர்ந்த பன்னீர்செல்வம், 51, இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக, 2015 ஜன., 30 முதல் பணியாற்றி வந்தார்.இவரது கட்டுப்பாட்டில், வேலுார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்துார், கிருஷ்ணகிரி, விழுப்புரம், தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. புதிதாக தொழிற்சாலை, பள்ளி, சினிமா தியேட்டர் துவங்க, பெயர் மாற்றம், புதுப்பித்தல் தொடர்பான அனுமதி போன்றவற்றை, இவரிடம் தான் பெற வேண்டும்.மேலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, தோல் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, மாசு இல்லை என, சான்று வழங்கும் பணியையும் செய்து வந்தார்.


மாதாந்திர கப்பம்
இதற்காக, ஒவ்வொரு தொழிற்சாலையிலும், மாதா மாதம் அவர், லஞ்சம் பெற்று வந்ததாக, வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு, புகார்கள் சென்றன. இதையடுத்து, அவரது அலுவலகம், வீடு ஆகியவற்றை, சாதாரண உடையில், போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், 13ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, காட்பாடி காந்தி நகரில் உள்ள, அவரது அலுவலகத்தில், ஏழு மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடப்பதாகவும், அங்கு, கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்க, லஞ்சம் வாங்க உள்ளதாகவும் தகவல் கிடைத்தது.


வேட்டை துவக்கம்லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், அங்கு செல்வதற்குள் கூட்டம் முடிந்து, பன்னீர்செல்வம், லஞ்சப்பணம் மற்றும் கோப்புகளுடன், விருதம்பட்டில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.உடனடியாக அங்கு சென்ற, லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., ஹேமசித்ரா தலைமையிலான போலீசார், அதிரடியாக கார் மற்றும் வீடு முழுதும் சோதனையிட்டு, கணக்கில் வராத, 33.73 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.
பன்னீர்செல்வத்தின், மற்றொரு சொகுசு பங்களா, ராணிப்பேட்டை, பாரதி நகர் வளையாபதி தெருவில் உள்ளது. போலீசார், நேற்று முன்தினம் காலை, 11:00 முதல், நேற்று காலை, 6:00 வரை, தொடர்ந்து, 19 மணி நேரம் சோதனை நடத்தினர்.வீட்டிலிருந்த ஆறு இரும்பு பெட்டிகளை திறக்கும்படி கூறியபோது, தன்னிடம் சாவி இல்லை என, முதலில் மறுத்த அவரது மனைவி புஷ்பா, 45, பின் சாவிகளை கொடுத்துள்ளார். பெட்டிகளை திறந்து பார்த்த போது, கட்டுக் கட்டாக பணமும், நகையும் இருந்தன. வங்கிகளில் இருந்து, 11 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பணம் எண்ணும் பணி நடந்தது. நகைகளை அளவிட, நான்கு நகை எடை போடும் கருவிகள் மற்றும் மதிப்பிட இரண்டு பேர் வரவழைக்கப்பட்டனர்.


குப்பைக் கூடையில் பணம்வீட்டிலிருந்த குப்பைக்கூடை, வாஷிங் மிஷன், அழுக்கு துணி போடும் கூடைகள், பிரிஜ், கழிவறை, 'ஏசி' மிஷின் ஆகியவற்றிலும், கட்டுக்கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருந்ததை கண்டு, போலீசார் அதிர்ந்தனர். விடிய விடிய எண்ணியதில், கணக்கில் வராத, 3 கோடியே, 25 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. ‍மேலும், 3.6 கிலோ தங்க நகைகள், தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள், 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 90 சொத்து ஆவணங்களை, போலீசார் கைப்பற்றினர்.


20 லாக்கர்கள் முடக்கம்

வேலுார், அரக்கோணம், சென்னை, ஆந்திர மாநிலம், சித்துார், திருப்பதி என, பல்வேறு இடங்களில், வாங்கிக் குவித்த வீடு, நிலங்கள் அடங்கிய, 90 சொத்து பத்திரங்களின் மதிப்பு, 20 கோடி ரூபாய் வரை இருக்கும் என, போலீசார் கூறினர். இதையடுத்து, ஊழல் தடுப்பு சட்டத்தில், பன்னீர்செல்வம் மீது, வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பன்னீர்செல்வம் மீது, துறை ரீதியான விசாரணையும் துவங்கியுள்ளது.
கைப்பற்றப்பட்ட பணம், நகை, வெள்ளிப் பொருட்கள், வேலுார் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. போலீசார் கூறுகையில், 'கைப்பற்றப்பட்ட பணம் குறித்த எந்த கேள்விக்கும், பன்னீர்செல்வம் பதில் கூறவில்லை' என்றனர்.பன்னீர்செல்வத்தின் பெயரில், பல்வேறு வங்கிகளில் இருந்த, 20 லாக்கர், 12 கணக்குகள் முடக்கப்பட்டன.


கை மாறிய கோடிகள்கடந்த, 2015ம் ஆண்டு, ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் ரசாயன தொழிற்சாலையில், கழிவுநீர் தொட்டி உடைந்து, 10 பேர் பலியாயினர். இதையடுத்து, அந்த தொழிற்சாலை மூடப்பட்டது.மேலும், பராமரிப்பில்லாத 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதற்கு, விசாரணை அதிகாரியாக பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டிருந்தார்.
மூன்று மாதங்களுக்கு பின், அனைத்து தொழிற்சாலைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் கை மாறியுள்ளது.வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், 8,000க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள், ஷூ தயாரிக்கும் நிறுவனங்கள், ரசாயனம் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.மத்திய அரசு உத்தரவின்படி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து, மாசு இல்லை என, சான்று அளிக்க வேண்டும். இதிலும் பன்னீர்செல்வம், பலத்த வசூல் வேட்டை நடத்தியுள்ளார்.


ரூ.100 கோடி சொத்து?தோல் பதனிடும் தொழிற்சாலைகளில், கழிவு நீரை சுத்திகரித்து, மறு சுழற்சி முறையில் பயன்படுத்த, மத்திய அரசு, 50 சதவீதம் மானியம் அளிக்கிறது. இதிலும், பன்னீர்செல்வம் கணிசமாக லஞ்சம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.ஒருமுறை, தோல் தொழிற்சாலையை ஆய்வு செய்ய, ஒரு லட்சம் ரூபாய் வரை, லஞ்சம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.குறுகிய காலத்தில் பன்னீர்செல்வம், 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக, மேலிடத்துக்கு புகார்கள் சென்றன. பலமுறை, துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது.

ஒரு முறை மட்டும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். மற்றபடி அவர் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எம்.டெக்., படித்துள்ள பன்னீர்செல்வத்துக்கு, மனைவி புஷ்பா, 45. இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஒரு மகள், கணவருடன் வசிக்கிறார். மற்றொரு மகள், சென்னையில் அரசு அதிகாரியாக உள்ளார்.
மகன் முதுநிலை படிப்பு முடித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத, பயிற்சி மையத்தில் படித்து வருகிறார்.


திமிங்கிலம் சிக்குமா?லஞ்ச ஒழிப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்றாலே, லஞ்சம் விளையாடும் இடம் தான்! ஒவ்வொரு மாவட்டத்திலும் அலுவலகம் இருந்தாலும், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, வேலுார், ராணிப்பேட்டை, சென்னை, மதுரை, துாத்துக்குடி என, வளம் கொழிக்கும் இடங்களில் பணிபுரியவே, அதிகாரிகளிடையே பலத்த போட்டியிருக்கும்.அந்த பணியிடங்களை பிடிக்க, மேலிடத்துக்கு, பல கோடி ரூபாய் கப்பம் கட்டிய பின் தான், அதற்கான உத்தரவு கிடைக்கும். இப்படி பணம் கொடுத்து, 'போஸ்டிங்' வாங்கி வரும் அதிகாரிகள், எப்படி நியாயமாக நடந்து கொள்வர்!

தற்போது சிக்கியுள்ள பன்னீர்செல்வம், ஆறு ஆண்டுகளாக, ஏழு மாவட்டங்களுக்கு பொறுப்பாளர். ஏழு மாவட்டங்களில், தர்மபுரி தவிர பிற மாவட்டங்கள், அதிக தொழிற்சாலைகள் உள்ள மாவட்டம். இதனால், வசூல், 'துாள்' பறந்துள்ளது.புகாரின் அடிப்படையில் தான், வலை வரித்தோம். அதில் சிக்கிய பன்னீர்செல்வம், வெறும் முதலை தான். அதற்கு பாதுகாப்பு அரண் அமைத்து கொடுத்த திமிங்கிலங்கள், தப்பி விட்டன. பன்னீர்செல்வம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் பொறுப்பில் உள்ளவர்களையும், நல்ல முறையில் கவனித்துள்ளதால், ஒரே இடத்தில் பணியில் இருந்து வருகிறார்.எங்களுடைய விசாரணை, எந்த அழுத்தமும் இல்லாமல், நியாயமாக நடந்தால், சென்னையில் உயர் பொறுப்பில் உள்ள பலரும் இதில் சிக்குவர்.இவ்வாறு அவர் கூறினார்.


சிக்கியது எப்படி?பன்னீர்செல்வத்திடம் தனிப்பட்ட முறையில், 20க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வந்தனர்.
அதில் ஒருவர், தன் மகள் திருமணத்துக்கு, 10 லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். இதனால், அவரை வேலையிலிருந்து பன்னீர்செல்வம் நிறுத்தி விட்டார். அவர் தான் பன்னீர்செல்வத்தை சிக்க வைத்தவர் என, தகவல் பரவி வருகிறது.பன்னீர்செல்வம், லஞ்சம் வாங்குவதற்கு என்றே தனிப்பட்ட முறையில், 20 பேரை வேலைக்கு வைத்திருந்தார். அவர்களிடம், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் அவர்கள், நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

விருதம்பட்டில் சோதனை நடத்திய பின், பாரதி நகரில் உள்ள அவரது மற்றொரு பங்களா வீட்டில் சோதனை செய்ய, போலீசார் சென்றனர். இது தெரியாமல், பன்னீர்செல்வம் விருதம்பட்டிலேயே இருந்துள்ளார்.சோதனை துவங்கிய, இரண்டு மணி நேரத்துக்கு பின் தான், அங்கு சென்றுள்ளார். இவ்வளவு பணம் வந்தது குறித்து, பன்னீர்செல்வத்தின் மனைவி புஷ்பாவிடம் கேட்டதற்கு, 'என் கணவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்' என கூறிவிட்டார்.சிறிது நேரத்தில், மயக்கம் போட்டு விழுந்த அவரை, மகளிர் போலீசார், அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, முதலுதவி அளித்து அழைத்து வந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Coimbatore,இந்தியா
19-அக்-202010:07:29 IST Report Abuse
Raja இவருடைய புகைப்படத்தை மட்டும் போடாமல் இவருடைய முழு குடும்ப படத்தையும் வெளியிட வேண்டும். இவருடைய லஞ்ச பணத்தில் வாழ்ந்த அவர்களுக்கு இவருடன் சேர்த்து தண்டனை கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
18-அக்-202011:23:39 IST Report Abuse
Amirthalingam Shanmugam இதுவும் கடந்து போகும்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
17-அக்-202012:05:50 IST Report Abuse
 Muruga Vel பவர் ஆப் அட்டார்னி பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவது ரொம்ப கொடுமையா இருக்கு ..ஊழலின் ஊற்றுக்கண் சார்பதிவாளர் அலுவலகங்கள் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X