புதுடில்லி : கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2020 - 2021ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 10.3 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என சர்வதேச நிதியகம் தெரிவித்துள்ளது. மேலும், சீனா, மியான்மர், நேபாளம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதில், அதிகளவு பாதிப்பு இந்தியாவிற்கு தான் எனக் குறிப்பிடப்பட்டது.
இதனை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில், பா.ஜ., அரசின் மற்றுமொரு மகத்தான சாதனை. கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட, இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன என கிண்டலாக பதிவிட்டார்.

இவரின் கருத்து சமூகவலைதளங்களில் வைரலானது. பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கருத்து பதிவிட்டனர். இதனால் டுவிட்டரில் இந்திய அளவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ராகுல் ஆகியவை டிரெண்ட் ஆனது.
''கொரோனா தொடர்பாக பிப்ரவரி மாதமே காங்கிரஸின் ராகுல் எச்சரித்தார். அப்போது பா.ஜ., அரசு கேட்டிருந்தால் இந்தளவுக்கு இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நாட்டின் வளர்ச்சி, சீன அரசுக்கு சமமாக இருந்தது. ஆனால் இப்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளுடன் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா போட்டி போடும் அளவுக்கு பா.ஜ., அரசு கொண்டு வந்துவிட்டது'' என காங்கிரஸ் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் ராகுலுக்கு எதிராகவும் பலரும் கருத்து பதிவிட்டனர். ''அந்த நாடுகள் சிறப்பாக செயல்படுகின்றன என்றால் ராகுல் அங்கு போய் வாழுங்கள். நீங்கள் அங்கு வேண்டுமானால் பிரதமர் ஆகலாம் என ஒருவர் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், ''இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு, அவர் குறிப்பிட்டு சொல்லும் மற்ற நாடுகளின் மக்கள் தொகை எவ்வளவு, இந்தியாவில் முடிந்தளவு கொரோனா இறப்பு விகிதம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பேர் நோயிலிருந்து குணமாகி உள்ளனர். அரசின் செயல்பாடுகளை பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, மற்ற நாடுகளை உயர்த்தி பிடிக்கிறேன் என நம் நாட்டின் மதிப்பை குறைக்காதீர்கள்'' என பதிவிட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE