நடிகர்கள் சமூக பிரச்னைகளில் கருத்து சொல்லலாமா... எல்லா பிரச்னைகளுக்கும் கருத்து சொல்லித் தான் ஆக வேண்டுமா... அதற்கான புரிதல், அறிவு, சமூக நலம், நடிகர்கள், நடிகையர் போன்ற சினிமா நட்சத்திரங்களுக்கு உள்ளதா?வெறுமனே அறிக்கை வெளியிட்டு, விளம்பரம் தேடிக் கொள்வது, சரி தானா என்பன போன்ற பல கேள்விகள், இது பற்றி சிந்திக்கும் அனைவருக்கும் எழுகின்றன.
பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. அதற்காக, சமூக வலைதளங்களிலும், பொது வெளிகளிலும் நடிகர்கள், நடிகையர் கருத்து சொல்லத் தான் வேண்டுமா; அவ்வாறு கருத்து சொல்வது, குழப்பமான அரசியல் நிலைமையை மேலும் குழப்பாதா?சினிமா நட்சத்திரங்களை போல, விளம்பர படங்களில் நடிப்போர், நாடகங்களில் நடிப்போர், இணையதளங்களில் புகழ்பெற்றவர்கள், 'டிவி' பிரபலங்களும், கருத்து சொல்கிறேன் பேர்வழி என இறங்கி விட்டால், தமிழகம் தாங்குமா?
யாரும் இல்லை
சினிமா நட்சத்திரங்களின் தொழில், நடிப்பு மட்டுமே. அந்த நட்சத்திரங்கள் படித்திருக்கின்றனரோ அல்லது பல துறைகளில் அனுபவம் பெற்றிருக்கின்றனரோ தெரியாது. ஆனால், எல்லா விவகாரங்களிலும், குறிப்பாக, சர்ச்சைக்குரிய பல விவகாரங்களில், கருத்து தெரிவித்து, குழப்பங்களை மேலும் அதிகரிக்கின்றனர்.
இந்த செயலை, அவர்கள் சாதாரண நடிகராக அல்லது நடிகையாக, சினிமா வாய்ப்புக்காக அலைந்த காலங்களில் செய்வதில்லை. ஒன்றிரண்டு படங்கள் நன்றாக ஓடி, பணம் அபரிமிதமாக சேர்ந்ததும், அவர்களுக்கு அரசியல் ஆர்வம் வந்து விடுகிறது.தங்களுக்கு சம்பந்தம் இல்லாத பிரச்னைகளுக்கு அறிக்கைகளாகவும், பேட்டிகளாகவும் கொடுத்து, மேலும் புகழ்பெற நினைக்கின்றனர்.
ஆனால், அதே சினிமாவில் பணியாற்றும் கேமராமேன்களோ, ஒளிப்பதிவு இயக்குனர்களோ, ஒலிப்பதிவு கலைஞர்களோ, சினிமா வினியோகஸ்தர்களோ, சினிமா தியேட்டர் உரிமையாளர்களோ, மேக் - அப் கலைஞர்களோ அவ்வாறு செய்வதில்லை.படங்களில் நடிப்பதால், ஏகப்பட்ட பணம், புகழ் கிடைக்கிறது. அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரோ அல்லது அரசின் சாதாரண ஊழியரோ, தன் வாழ்நாளில் சம்பாதிக்க முடியாத அளவு பணத்தை, சினிமா நடிகர்கள், நடிகையர், ஒன்றிரண்டு படங்களில் சம்பாதித்து விடுகின்றனர்.இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், ஆயிரம் அரசு ஊழியர்கள், தங்கள் வாழ்நாளில் சம்பாதிக்கும் சொத்து, பணம், முதலீடுகளை, இந்த நட்சத்திரங்கள், ஒன்றிரண்டு ஆண்டுகளில், சில படங்களில் சம்பாதித்து விடுகின்றனர்.
பெரிய நடிகர்களாக இருப்பவர்கள் மட்டுமின்றி, சாதாரணமாக, 10 - 20 நாட்கள் ஓடும் படங்களின் கதாநாயக நடிகர்கள், கதாநாயகிகள், இயக்குனர்கள், கோடிகளை எளிதாக குவிக்கின்றனர். அவர்களின் ஒரு படம் வெற்றி அடைந்தால், அதே, 'பார்முலா'வில், பல படங்களில் நடித்து, அவற்றில் பல ஓடாமல், தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போடச் செய்யும் நடிகர்கள் தான் பலர்.எனினும் அவர்கள், நாட்டின் அரசியல், சமூகம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விவகாரங்களில், தங்கள் இஷ்டப்படி கருத்து தெரிவிப்பது வழக்கமாக உள்ளது. அதை தட்டிக் கேட்பார் யாரும் இல்லை.
சமீப காலமாக அதிகரிப்பு
இந்தப்போக்கு, எம்.ஜி.ஆர்., - சிவாஜி காலங்களில் இல்லை. கமல் - ரஜினியின் துவக்கக் காலங்களில் இல்லை; சமீபக் காலமாகத் தான் அதிகரித்துள்ளது.அதிலும், 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், வாட்ஸ்ஆப்' போன்ற சமூக வலைதளங்கள் பெருகியுள்ள இந்த காலக்கட்டத்தில், இந்த நட்சத்திரங்களை பின்தொடரும் ஆர்வலர்களுக்கு, இவர்கள் அடிக்கடி, 'தீனி' போட்ட வண்ணமாகவே உள்ளனர்.அவர்கள் பிரபலமாக இருப்பதால், அவர்களின் கருத்துகள், விரைவாக நிறைய பேரை சென்றடைகின்றன. அந்தக் கருத்து, மிகுந்த தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தி, அதையே நியாயம் என்று பலர் கருதவும் வாய்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.
அதிலும், அரசியல் ஆர்வம் உள்ள சில நட்சத்திரங்கள், தங்களின் படங்களில், ஆங்காங்கே, அரசியல் வசனங்களை சேர்த்து, 'நான் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தையே தலைகீழாக மாற்றி விடுவேன்...' என்கின்றனர். அதை கேட்கும், அவரின் ரசிகர்கள், 'ஆ... தலைவா; அரசியலுக்கு வா தலைவா' என, அழைக்கின்றனர்.சிலர், இன்று வருவேன், நாளை வருவேன் என கூறியே, 30 ஆண்டுகளைக் கடந்தும் விட்டனர். எனினும், அவர்களின் படங்களில், இப்போதும், அரசியல் வாடை, சற்று துாக்கலாகவே உள்ளது.அதற்காக, சினிமா நடிகர்கள், நடிகையர் சமூக விவகாரங்களுக்கு, அரசியல் விவகாரங்களுக்கு கருத்து கூறக் கூடாது என சொல்லவில்லை; சொல்லத் தான் வேண்டும். அதற்கு முன், நாம் நியாயமாக, நேர்மையாக, பிறருக்கு முன்னுதாரணமாக நடந்துக் காட்ட வேண்டும்.பெரும்பாலும், அனைத்தும் வெற்றிப்படங்களாக கொடுக்கும் நடிகர் அஜித், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, சினிமா உலகில் உள்ளார்.
எனினும், அவர், 'வாய்ஸ்' கொடுப்பதில்லை. அவர் போல, பல நடிகர்களை உதாரணமாக கூறலாம்.எம்.ஜி.ஆர்., படங்களில், கொடை வள்ளலாக நடித்தது போலவே, இயல்பிலும் இருந்தார். அவரின் படங்களில் புகை பிடிக்காமல், மது அருந்தாமல் நடித்தது போலவே, இயல்பிலும் இருந்தார் என்கின்றனர், அவருக்கு நெருக்கமானவர்கள்.ஜெயலலிதா, நடிப்பில் புத்திசாலியாக இருந்தது போலவே, இயல்பிலும் இருந்தார். ஆனால், பிற நடிகர்கள், அவரவர் துறையில் வல்லவர்கள்; ஆனால், எல்லாத் துறையிலும் கில்லாடிகள் இல்லை.இதை அவர்கள் மறந்து விடுவதால் தான், சமூகத்தில் வீண் விவாதங்களும், குழப்பங்களும் நடக்கின்றன. எல்லா நடிகருக்கும் அரசியல் ஆர்வம், ஒரு கட்சி பிடிமானம், பொதுநல ஈர்ப்பு இருக்கலாம்.
தலையிடுவதில்லை
அதுவே, பொதுவெளிக்கு சரிப்பட்டு வருமா என்றால், இருக்காது என்பதே பதிலாக அமையும். ஏனெனில், பெரிய சினிமா பிரபலங்கள், தங்கள் தொழிலைத் தான் சரியாக செய்தனரே தவிர, சமூகத்தை திருத்த, பொதுவெளியை பயன்படுத்தவில்லை.குறிப்பாக, மிகச் சிறந்த நடிகர் சிவாஜி கணேசன், அற்புதமான பாடல்களை தந்த கவிஞர் கண்ணதாசன், காலத்தால் மறக்க முடியாத காவியங்களை தந்த, ஏ.பி.நாகராஜன், இயக்குனர் இமயம் பாலசந்தர், இயக்குனர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர் போன்றோர், சமூக பிரச்னைகளில் மூக்கை நுழைத்ததே இல்லை.
அந்த வேலைகளுக்கு எல்லாம் அரசு, அதிகாரிகள், அரசியல்வாதிகள் இருக்கின்றனர் என கருதி, தங்கள் வேலைகளை மட்டுமே பார்த்தனர். பழம்பெரும் நடிகையர் பத்மினி, கே.ஆர்.விஜயா, சரோஜாதேவி, தேவிகா, காஞ்சனா போன்ற பலருக்கு, இன்னமும் ரசிகர்கள் மத்தியில் மவுசு இருக்கிறது. ஆனால் அவர்கள், சமூக, அரசியல் விவகாரங்களில் தலையிட்டதில்லை; தலையிடுவதில்லை.தமிழகம் கண்ட மிகச் சிறந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்; அவர் போலவே, மிகச் சிறந்த இளையராஜா, எப்போதுமே, தாங்கள் உண்டு, தங்கள் வேலை உண்டு என இருந்தனர்; இருக்கின்றனர்.
அவசர புரிதல்
ஆனால், நான்கைந்து படங்களை மட்டுமே வெற்றியாக்கியுள்ள ஒரு நடிகர், சில மாணவர்களுக்கு, சில ஆண்டுகளாக, கல்வி உதவித்தொகை அளிப்பதால் மட்டும், நாட்டின் கல்வி முறை சரியில்லை என கருத்து கூறுவது, செல்லாத ஊருக்கு வழி சொல்வது போலத் தான் அமைந்து விடுகிறது.எனவே, சினிமாவால் பிரபலமானவர்கள், அந்த துறைக்குத் தான் கைமாறு செய்ய வேண்டும். அந்த துறையில் உள்ள நலிவடைந்தவர்களுக்கு உதவ வேண்டும்; அந்த துறையில் புதுமைகளை புகுத்தி, உலக தரத்திற்கு மாற்ற வேண்டும்.அதை விட்டு, எனக்கும் எழுத தெரியும்; பேசத் தெரியும் என நினைத்து, கருத்து கூற தலைப்பட்டால், அவர்களின் புகழ் மங்கிப் போகும் என்பதற்கு, பல உதாரணங்கள் உள்ளன.
கட்சி சார்பாக இயங்கும் சினிமா பிரபலங்களுக்கு இது பொருந்தாது. மற்றபடி, பொது வாழ்வில், இயங்கும் பிரபலங்கள், குறிப்பாக நடிகர்கள், பிரச்னையின் எதிர்கால நிலை, மக்களின் புரிதல், தங்களது எதிர்கால வாழ்வு என எல்லாவற்றையும் யோசித்தே களம் காணவேண்டும். தவிர, உணர்ச்சி மேலிட, அப்போதைய, 'டிரென்ட்' கருதியோ அல்லது அவசரப் புரிதலால் எடுக்கும் முடிவின் படியோ, கருத்து சொல்லுதல் அல்லது அரசு ஆணையை எதிர்ப்பது என்ற வகையில் செயல்படுவது, அறிவானதும் அல்ல; பொறுப்பானதும் அல்ல.
பெரும்பாலான நடிகர்கள், நடிகையர் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கின்றனர். சிலர், தங்களின் அபரிமிதமான பணத்தில் கொஞ்சத்தை, சமூகத்திற்காக செலவிடுகின்றனர். சிலர், அறக்கட்டளையை துவக்கி, சமூக பணிகளிலும் ஈடுபடுகின்றனர். ஆனால், அறக்கட்டளை நடத்துவது ஒன்றே, அரசின் திட்டங்களை, கொள்கை முடிவுகளை எதிர்க்கும் வகையில் பேசுவதற்கு தகுதியாகி விடாது. ஒன்று, துணிந்து களத்தில் இறங்கி மக்களை திரட்டி போராட வேண்டும் அல்லது நீதிமன்றத்தை நாடலாம். அதை விட்டு, வேறு, 'வேலைகளை' பார்க்கக் கூடாது.
கணக்கு உள்ளதா?
ஏனெனில், சினிமா தொழிலில், 90 சதவீதம் கணக்கில் வராத பணம் தான் புழங்குகிறது என்கின்றனர், அந்தத் துறை விபரம் அறிந்தோர். பல ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் ஒரு தொழிற்சாலையை அல்லது தொழிலை ஏற்படுத்த, செலவிடப்படும் ஒவ்வொரு பைசாவும் கணக்கு காட்டப்படுகிறது. சினிமாவில் சம்பாதிக்கும் பணத்திற்கு, போடப்படும் முதலுக்கு, எந்த கணக்கு உள்ளது?கதாநாயகர்கள் முதல், கடை கோடி தொழிலாளர் வரை சம்பாதிக்கும் பணம், சம்பளம், இதர பணம் குறித்த கணக்கு, யாரிடமாவது உள்ளதா அல்லது அரசுக்காவது காட்டப்படுகிறதா?கோடிக்கணக்கான பணத்தை போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர், கடைசி நேரத்தில், 5 - 10 சதவீத வட்டிக்கு கூட, பணத்தை வாங்கி போட்டு, படத்தை முடிக்கிறார். அதற்கு கணக்கு காட்டப்படுகிறதா?
ஒன்றிரண்டு படங்கள் ஓடிய நாயக நடிகர்களின் சம்பளம், கோடிகளில் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், அந்தப் படத்தின் லைட்மேன், வாகன ஓட்டுனர், மேக் - அப் கலைஞர்கள் சம்பளம், அந்த அளவுக்கு இல்லையே!உங்கள் தொழிலில், அனைவரும் உழைப்பை சிந்தினாலும், நஷ்டம் ஏற்பட்டால், அதன் பாதிப்பு எல்லாருக்கும் சேர்வதில்லையே; தயாரிப்பாளர் தானே அமிழ்ந்து
போகிறார்?
மக்கள் தயாராக இல்லை
முடிவாக, ஒரு கேள்வி! ஒரு நடிகரின் முகத்தை, அவர் படம் வெளிவந்த அன்றே காணத் துடிக்கும் ரசிகனின் ஆர்வவெறியை பயன்படுத்தி, ஒரு டிக்கெட், 1,000, 2,000 ரூபாய் என, தியேட்டர்களில் விற்கப்படுகிறதே, இதை, எந்த நடிகர் கண்டித்துள்ளார்; எந்த இயக்குனர் படமாக எடுத்துள்ளார்?சுருக்கமாக சொன்னால், வீட்டில் குப்பையை சிதற அடித்திருக்கும் ஒருவர், வீதியில் உள்ள குப்பையை அகற்ற முன்வந்தால் சிரிப்பு தானே வரும்!இன்னமும், சினிமா துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு, உயிர் பாதுகாப்பு கிடையாது. படப்பிடிப்பில் உயிர் சேதம் ஏற்பட்டால், அவ்வளவு தான்.
ஒன்றிரண்டு நடிகர்களும், நடிகையரும், தயாரிப்பாளரும், இயக்குனரும் சம்பாதிப்பதால் தான், இந்த இழிநிலை. எனவே, சினிமா நடிகர்களின் கருத்தை கேட்க மக்கள் தயாராக இல்லை. முன் போல, ரசிகர்கள் இல்லை; விபரமாகி விட்டனர். எனவே, உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்!
டி.சீனிவாசன்
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு: இ - மெயில்: srinivasdesigan@gmail.com