தேவையற்ற வழக்கு தாக்கல் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேவையற்ற வழக்கு தாக்கல் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும்

Added : அக் 17, 2020
Share
மதுரை : தேவையற்ற வழக்குகள் தாக்கல் செய்வதை குறைத்து, கட்டுப்படுத்த வேண்டும். இதனால் உண்மையில் பாதிக்கப்பட்டு மனு செய்து காத்திருக்கும் ஏழைகளுக்கு நீதி வழங்குவதில் நீதிமன்ற நேரத்தை செலவிடலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லில் ஒரு பள்ளியில் நெசவு பயிற்றுனராக கஸ்துாரிபாய் பணிபுரிந்தார். 1992 ல் விருப்ப ஓய்வு பெற்றார். ஓய்வூதியம்

மதுரை : தேவையற்ற வழக்குகள் தாக்கல் செய்வதை குறைத்து, கட்டுப்படுத்த வேண்டும். இதனால் உண்மையில் பாதிக்கப்பட்டு மனு செய்து காத்திருக்கும் ஏழைகளுக்கு நீதி வழங்குவதில் நீதிமன்ற நேரத்தை செலவிடலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லில் ஒரு பள்ளியில் நெசவு பயிற்றுனராக கஸ்துாரிபாய் பணிபுரிந்தார். 1992 ல் விருப்ப ஓய்வு பெற்றார். ஓய்வூதியம் மற்றும் பணப் பலன்கள் வழங்கக்கோரிய அவரது மனுவை திண்டுக்கல் மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் நிராகரித்தார். அதை ரத்து செய்து, பணப் பலன்கள் வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் கஸ்துாரிபாய் மனு செய்தார். நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.அரசுத் தரப்பில், 'மனுதாரர் ராஜினாமா செய்ததிலிருந்து 19 ஆண்டுகளுக்கு பின் தாமதமாக 2011 ல் மனு அளித்தார். விதிகள்படி 20 ஆண்டுகள் பணி பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே விருப்ப ஓய்விற்கான பணப் பலன்களை பெற தகுதி உண்டு. மனுதாரர் 18 ஆண்டுகள் 7 மாதங்கள் 27 நாட்கள் பணிபுரிந்துள்ளார்.

அவரது கோரிக்கை ஏற்புடையதல்ல,' என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி உத்தரவு: ஓய்வூதிய விதிகள்படி மனுதாரர் கோரிக்கை ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்கிறேன்.தற்போது அரசுக்கு மனு அனுப்பிவிட்டு, மனுவை பரிசீலிக்க உத்தரவிடுமாறு உடனடியாக நீதிமன்றத்தை நாடும் போக்கு நிலவுகிறது. மனுதாரர் 19 ஆண்டுகளுக்குப் பின் அரசுக்கு முதன்முதலில் மனு அனுப்பியுள்ளார். பலன்களை வழங்க தாமதமாக உரிமை கோரும்போது, அது தொடர்பான அசல் ஆவணங்களை தேடி கண்டுபிடித்து உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சிரமப்படுகின்றனர்.

தாமதமாக மனு செய்து, மனுவை பரிசீலிக்க உத்தரவிடுமாறு பின்வாசல் வழியாக வந்து, தீர்வு காண முயற்சிப்பதை ஊக்குவிக்க முடியாது.நீதிமன்றத்தின் மதிப்புமிக்க நேரத்தை, நீதியை எதிர்நோக்கி காத்திருப்போருக்கு பயன்படுத்த வேண்டும். உயர்நீதிமன்றமானது நீதிவழங்கும் கோயில். அங்கு சுத்தமான கரங்களுடன் சட்டப்பூர்வமான உரிமையை நிலைநாட்ட நாடுவோருக்கு விரைவில் நீதி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தேவையற்ற மற்றும் காலம் கடந்து உரிமை கோரி வழக்குகள் தாக்கல் செய்வதை குறைக்க வேண்டும்; நிறுத்த வேண்டும்.

இதனால் உண்மையில் பாதிக்கப்பட்டு மனு செய்து காத்திருக்கும் ஏழைகளுக்கு நீதி வழங்குவதில் நீதிமன்ற நேரத்தை செலவிடலாம்.பணபலன்கள் வழங்க உத்தரவிடக்கோரி மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அதிகளவு மனு செய்கின்றனர். தேவைற்ற பல வழக்குகள் நிலுவையால், உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளை உயர்நீதிமன்றத்தால் பைசல் செய்ய முடியவில்லை.வழக்கு தாக்கல் செய்யும் கொள்கையை மத்திய, மாநில அரசுகள் திறம்பட செயல்படுத்தவில்லை. அரசுத்தரப்பில் போதிய அடிப்படை சட்ட ஆதாரமின்றி, இயந்திரத்தனமாக மேல்முறையீடு செய்கின்றனர். இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. சில மனுக்கள் தாக்கல் செய்வதை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மதிப்புமிக்க நீதிமன்ற நேரத்தை உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிட முடியும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X