வட மாநிலங்களிலிருந்து கள்ளத் துப்பாக்கி தாராள சப்ளை: ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கு இது தான் காரணம்| Dinamalar

வட மாநிலங்களிலிருந்து கள்ளத் துப்பாக்கி தாராள 'சப்ளை': ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கு இது தான் காரணம்

Updated : அக் 19, 2020 | Added : அக் 18, 2020 | கருத்துகள் (9) | |
'வட மாநிலங்களில் தயாரிக்கப்படும் கள்ளத் துப்பாக்கிகள், தமிழகத்தில் உள்ள ரவுடிகளுக்கு, தாராளமாக, 'சப்ளை' செய்யப்படு கின்றன. இதனால் தான், ரவுடிகள் ராஜ்ஜியம் அதிகரித்து வருகிறது. இந்த விபரீதப் போக்கை தடுக்க வேண்டியது அவசியம். இனியாவது, காவல் துறையினர் விழித்துக் கொள்ள வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழகத்தில், 16 ஆயிரத்து, 502 ரவுடிகள் இருப்பதாக,
வடமாநிலங்கள், கள்ளத்துப்பாக்கி, தாராளசப்ளை, ரவுடிகள்,      ராஜ்ஜியம்

'வட மாநிலங்களில் தயாரிக்கப்படும் கள்ளத் துப்பாக்கிகள், தமிழகத்தில் உள்ள ரவுடிகளுக்கு, தாராளமாக, 'சப்ளை' செய்யப்படு கின்றன. இதனால் தான், ரவுடிகள் ராஜ்ஜியம் அதிகரித்து வருகிறது. இந்த விபரீதப் போக்கை தடுக்க வேண்டியது அவசியம். இனியாவது, காவல் துறையினர் விழித்துக் கொள்ள வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில், 16 ஆயிரத்து, 502 ரவுடிகள் இருப்பதாக, முன்னாள் டி.ஜி.பி., ராமானுஜம், 2012ல், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், அதிகபட்சமாக, சென்னையில், 3,175; நெல்லை நகரில், 334; நெல்லை புறநகரில், 1,214; மதுரையில், 888; மதுரை புறநகரில் 484; கன்னியாகுமரியில், 748 ரவுடிகள் உள்ளனர். குறைந்தபட்சமாக, திருவாரூரில், 84; பெரம்பலுாரில், 84; நீலகிரியில், 65 ரவுடிகள் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. தற்போதும், தமிழகத்தில் புற்றீசல்கள் போல, ரவுடிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து விட்டது. அதில், தலைநகர் சென்னை, எப்போதும் போலவே, முதலிடத்தில் இருப்பதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


'ஏ - பிளஸ்' பிரிவுரவுடிகள் ரகம் ரவுடிகளை போலீசார், 'ஏ - பிளஸ், ஏ, பி, சி' என, நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர். சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளில், ௨௦ ஆண்டுகளாக அட்டூழியம் செய்து வந்த, 'பங்க்' குமார், திண்டுக்கல் பாண்டி, 'கேட்' ராஜேந்திரன், அயோத்தி குப்பம் வீரமணி, வெள்ளை ரவி உள்ளிட்டோர், 'ஏ - பிளஸ்' ரவுடி லிஸ்டில் இருந்தனர். இவர்களில் சிலர், போலீசாரால், 'என்கவுன்டர்' முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சிலர், எதிரிகளால் தீர்த்துக் கட்டப்பட்டனர்.தற்போது, இவர்களின் அடிவருடிகள் மற்றும் வாரிசுகள், நாகேந்திரன், 'சிடி' மணி, கல்வெட்டு ரவி, ஈசா, காக்கா தோப்பு பாலாஜி என, ஏராளமான ரவுடிகள், 'ஏ - பிளஸ்' பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

கூலிப்படை ரவுடிகள், 'ஏ' பிரிவிலும்; கொலை முயற்சிகள், அடிதடி, மாமூல் வசூலிப்பில் ஈடுபடும் ரவுடிகள், 'பி' பிரிவிலும்; ஒரு கொலை முயற்சி மற்றும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடும் ரவுடிகள், 'சி' பிரிவிலும் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ரவுடிகளிடம், கள்ளத் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து விட்டது. துப்பாக்கி இல்லாதவர்களை, தங்கள் லிஸ்டில், ரவுடிகளே சேர்ப்பது இல்லை என தெரிய வருகிறது.


ஏஜன்டுகள்


இது குறித்து, பிரபல ரவுடியின் கூட்டாளிகள் கூறியதாவது:பீஹார், மேற்கு வங்கம், உ.பி., உள்ளிட்ட வட மாநிலங்களில், சட்ட விரோத தொழிற்சாலைகளில், கள்ளத் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் துப்பாக்கிகள், சரக்கு லாரி, கூரியர் சேவை வாகனங்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், உர மூட்டைகள், ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வாயிலாக, தமிழக ரவுடிகளுக்கு அனுப்பப்படுகின்றன. துப்பாக்கிகள், தயாரிக்கப்படும் இடத்தில் இருந்து, ரவுடிகளுக்கு கைமாறும் வரை, பல ஏஜன்டுகள் உள்ளனர். ஒருவர் பற்றி மற்றவர்களுக்கு தெரியாது. கடைநிலை ஏஜன்டுகள் மட்டுமே, போலீசாரிடம் பிடிபடுவதால், மற்றவர்கள் தப்பித்து விடுகின்றனர்.போலீசார் இப்போதாவது விழித்து, கள்ளத் துப்பாக்கி கடத்தல் தொழிலுக்கு, முடிவுரை எழுத வேண்டும். சட்டசபை தேர்தல் நெருங்குவதால், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, கள்ளத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X