புதுடில்லி:''மிகவும் குறிப்பிட்ட சில மாநிலங்களில், சில மாவட்டங்களில் மட்டுமே, கொரோனா வைரஸ் சமூகப் பரவல் உள்ளது; அதுவும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது,'' என, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 'வைரஸ் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து தான், மற்றவர்களுக்கு இது பரவுகிறது' என, கூறப்பட்டது.
அரசு உறுதி
இந்நிலையில், எப்படி பாதிப்பு ஏற்பட்டது என்பதை உறுதி செய்ய முடியாத, 'சமூகப் பரவல்' நிலை சில நாடுகளில் உள்ளதாகக் கூறப்படுகிறது.அதே நேரத்தில், 'நம் நாட்டில் சமூகப் பரவல் இல்லை' என, மத்திய அரசு உறுதியாகக் கூறி வருகிறது. 'சமூகப் பரவல் குறித்து, உலக சுகாதார அமைப்பு எந்த நிலையான வரையறையையும் வகுக்கவில்லை.
'அதனால், சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதியாகக் கூற முடியாத நிலை உள்ளது' என, சுகாதார அமைச்சகம் கூறி வந்துள்ளது.'மேற்கு வங்கத்தில் சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளது' என, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி சமீபத்தில் கூறியிருந்தார்.
மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், சமூக வலைதளம் மூலம், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.
நெருக்கம்
நேற்று நடந்த நிகழ்ச்சியின்போது, கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:சமூகப் பரவல் என்பது, நாடு முழுதும் ஏற்படவில்லை; ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களில், குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே அது இருப்பதாகக் கூறப்படுகிறது. அதுவும் கட்டுப்பாட்டில் உள்ளது. மேற்கு வங்கம் உட்பட சில மாநிலங்களில், மக்கள் தொகை நெருக்கம் அதிகமாக உள்ள சில பகுதிகளில் மட்டுமே ஏற்பட்டு உள்ளது.
ஆதாரங்கள்
கேரளாவில், ஓணம் பண்டிகையின் போது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், அங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. தளர்வுகளுக்கான விலையை, தற்போது கேரள அரசு கொடுத்துஉள்ளது. இந்த வைரஸ் பரவல், சீனாவின் வூஹான் நகரில் இருந்து தான் உலகெங்கும் பரவியுள்ளது என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளன. ஆனால், பல்வேறு நாடுகள் மூலமாகத் தான் வைரஸ் பரவியுள்ளதாக சீனா கூறியுள்ளது; ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.