சென்னை : தன் வாழ்க்கை படமான '800' படத்திலிருந்து விலகுங்கள் என விஜய் சேதுபதிக்கு கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு நன்றி வணக்கம் என டுவிட்டரில் பதிவிட்டார் விஜய் சேதுபதி. மேலும் இதன் அர்த்தம், எல்லாம் முடிந்து விட்டது, இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாகவே தெரிகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 800 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த தமிழரான இலங்கையை சேர்ந்த முத்தையா முரளிதரன் வாழ்க்கை '800' என்ற பெயரில் படமாகிறது. ஸ்ரீபதி இயக்கும் இப்படத்தில் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இலங்கை தமிழர்களுக்கு எதிராக பேசிய முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என அவருக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்துள்ளன.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே தமிழர்களுக்கு எதிரானவன் போன்று என்னை சித்தரித்து விட்டனர். நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல என முரளிதரன் சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும் பட தயாரிக்கும் நிறுவனமும் இப்படத்தில் முரளிதரன் கிரிக்கெட் வாழ்க்கை அவர் எப்படி தடைகளை கடந்து சாதித்தார் என்பதை மட்டுமே காட்டுகிறோம். வேறு எந்த சர்ச்சைகளும் இடம்பெறாது என கூறியிருந்தது.
ஆனாலும் அவருக்கு எதிரான எதிர்ப்புகள் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் பலரும் அவரை இப்படத்தில் நடிக்க வேண்டாம் என கூறி வருகின்றனர். மேலும் சமூகவலைதளங்களில் விஜய் சேதுபதியை, தமிழீன துரோகி போன்று அவரை சித்தரித்து வசை பாடி வருகின்றனர். இதனால் இப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் முரளிதரன் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ''என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் சில தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் வருகிறது. என்னால் தமிழ்நாட்டின் ஒரு சிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அவரின் கலைபயணத்தில் எதிர்காலத்தில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவரை இப்படத்திலிருந்து விலகும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்துவிடவில்லை. அதை எதிர்கொண்டு வென்றிருக்கிறேன். இந்தப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும், மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை படமாக்க சம்மதம் சொன்னேன். ஆனால் இப்போது அதற்கும் தடைகள் ஏற்பட்டுள்ளது. நிச்சயம் இந்த தடைகளை கடந்து இந்த படைப்பு வெளிவரும் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ளது. அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு நான் உறுதுணையாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
முரளிதரனின் இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி தனது டுவிட்டரில் நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்தார் நடிகர் விஜய்சேதுபதி. சில தினங்களுக்கு முன் முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவையடுத்து விஜய்சேதுபதி நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் வெளியே வந்த அவரிம், செய்தியாளர்கள் 800 படம் கைவிடப்பட்டதா என கேள்வி எழுப்பினர். அதற்கு, 'நன்றி, வணக்கம்' என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றார் விஜய் சேதுபதி.
இதன்மூலம் 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டார் என்பதையே இது காட்டுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE