சென்னை: ''வரும் சட்டசபை தேர்தல், தமிழர்களின் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை காக்கும் பெரும் போர்; அந்த போரில் வெல்வோம்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த, முப்பெரும் விழாவில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அவர் பேசியதாவது:துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, இப்போது எல்லோரும் தியாகி என, அழைக்கின்றனர். முதல்வர் பதவி அவரை தேடி வந்தது போலவும், அதை அவர், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு விட்டுக் கொடுத்து விட்டதை போலவும், அவரை பாராட்டுகின்றனர்.
அ.தி.மு.க., தோற்கப்போகிறது. தோற்கும் கட்சிக்கு, இ.பி.எஸ்., முதல்வர் வேட்பாளராக இருக்கட்டும் என, தந்திரமாக நழுவிக் கொண்டார் பன்னீர்செல்வம். இது தான் உண்மை. அதனால், பன்னீர்செல்வம் தியாகி அல்ல; இ.பி.எஸ்., முதல்வரும் அல்ல என்பதை, நடக்க இருக்கும் சட்டசபை தேர்தல் காட்டப் போகிறது. நடக்க இருக்கிற தேர்தல் என்பது, ஆட்சி மாற்றத்துக்காக தேர்தல் மட்டுமல்ல; தமிழர்களை காக்கும் பெரும் போர்.
தமிழர்களின் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை காக்கும் பெரும் போர்; அந்த போரில் வெல்வோம்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
மாணவர்களுக்கு செய்யும் துரோகம்
'மருத்துவ உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு, கவர்னர் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதும், அதற்கு அழுத்தம் தராமல், முதல்வர் இ.பி.எஸ்., வேடிக்கை பார்ப்பதும், அரசு பள்ளி மாணவர்களுக்கு செய்யும் துரோகம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
மருத்துவ கல்விக்கான, 'நீட்' நுழைவு தேர்வால், அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளித்து, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவிற்கு, இன்று வரை கவர்னர் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதும், அது குறித்த எந்த அழுத்தத்தையும், கவர்னருக்கு கொடுக்காமல், முதல்வர் இ.பி.எஸ்., வேடிக்கை பார்ப்பதும், அரசு பள்ளி மாணவர்களுக்கு செய்யும் துரோகம்.
தமிழகத்திற்கு, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை, கவர்னர், முதல்வர், மத்திய அரசு, ரகசிய கூட்டணி அமைத்து, நீர்த்துப் போக வைத்தன. அதேபோல, அரசு பள்ளி மாணவர்களுக்கான, ௭.௫ சதவீத இடஒதுக்கீடு மசோதாவையும் நீர்த்து போக வைத்து விடக்கூடாது. நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மசோதாவிற்கு, உடனே கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE