அந்தியூர்: வாரிசு சான்றிதழ் தர, லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,வை கண்டித்து, பேத்திகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியால், அந்தியூரில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி ஜோதிமணி, 63; கூலி தொழிலாளி. இவரது மருமகள் பிரியா, பிப்., 16ல் உடல்நலக்குறைவால் இறந்தார்.
இதனால், சொத்துகளை, பிரியாவின் குழந்தைகள் பெயருக்கு மாற்ற முடிவு செய்தார். மாத்துார் வி.ஏ.ஓ., சந்தோஷிடம், வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பித்தார். அவர் இழுத்தடிக்கவே, சில நாட்களுக்கு முன் நேரில் சென்று கேட்டுள்ளார். அப்போது, வி.ஏ.ஓ., 3,௦௦௦ ரூபாய் கேட்டுள்ளார். இந்நிலையில், அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு, பேத்திகளுடன் ஜோதிமணி நேற்று வந்தார்.
'வாரிசு சான்றிதழ் தர, மாத்துார், வி.ஏ.ஓ., லஞ்சம் கேட்கிறார். என்னிடம் பணமில்லை. எனவே பிச்சை போடுங்கள்' என எழுதிய பதாகையை, ஒரு பேத்தி கைகளில் பிடித்திருக்க, வளாகத்தில் அமர்ந்து, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பரிதாபப்பட்ட ஒரு சிலர், சிறு தொகை அவருக்கு தந்தனர். இதையடுத்து, தாசில்தார் மாரிமுத்துவிடம் புகார் அளித்தார். 'விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தாசில்தார் கூறவே, பேத்திகளுடன் கிளம்பி சென்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE