அபுதாபி: ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி ஏழாவது தோல்வியடைந்தது. ராஜஸ்தானின் பட்லர், அரைசதம் விளாசி சென்னை வெற்றிக் கனவை தகர்த்தார்.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நடந்த முக்கிய லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் 6 போட்டிகளில் தோற்றதால் கட்டாயம் வெல்ல வேண்டிய இக்கட்டான நிலையில் களமிறங்கின. ஐ.பி.எல்., அரங்கில் தனது 200வது போட்டியில் களமிறங்கிய சென்னை அணி கேப்டன் தோனி, 'டாஸ்' வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
சென்னை அணியில் பிராவோ, கரண் சர்மா நீக்கப்பட்டு ஹேசல்வுட், பியுஸ் சாவ்லா சேர்க்கப்பட்டனர். ராஜஸ்தான் அணியில் உனத்கட்டுக்குப் பதில் ராஜ்புத் சேர்க்கப்பட்டார்.சென்னை அணிக்கு டுபிளசி (10), வாட்சன் (8), கர்ரான் (22), அம்பதி ராயுடு (13) ஏமாற்றம் தந்தனர். தோனி 28 ரன் எடுத்தார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 125 ரன்கள் மட்டும் எடுத்தது. ஜடேஜா (35), கேதர் ஜாதவ் (4 ரன், 7 பந்து) அவுட்டாகாமல் இருந்தனர்.

பட்லர் அரைசதம்
ராஜஸ்தான் அணிக்கு ஸ்டோக்ஸ் (19), உத்தப்பா (4) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. சஞ்சு சாம்சன் 'டக்' அவுட்டாக, 28/3 என திணறியது ராஜஸ்தான். பின் கேப்டன் ஸ்மித்துடன் இணைந்த பட்லர், வேகமாக ரன்கள் சேர்க்க, சென்னை அணி வெற்றிக் கனவை தகர்த்தார். ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மித் (26), பட்லர் (70) அவுட்டாகாமல் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE