தேனி: 'நீட்' தேர்வுக்காக பணியை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா என்னை தத்தெடுக்கவில்லை. அவர் உதவி மட்டுமே செய்தார். சமூக வலைதளங்களில் இதுபோன்ற தவறான வீடியோக்களை அவர் வெளியிட வேண்டாம்,'' என, சமீபத்தில் நடந்த 'நீட்' தேர்வில் அகில இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதலிடத்தில் வெற்றி பெற்ற தேனி மாணவர் ஜீவித்குமார் தெரிவித்தார்.
மாணவி அனிதா தற்கொலைக்கு பின், 'நீட்' தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் என, சபரிமாலா தனது அரசு ஆசிரியைப் பணியை துறந்தார். அதன்பின் சமூக செயற்பாட்டாளராக உள்ளார்.
இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வார்பட்டி மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவர் ஜீவித்குமாரை தான் தத்தெடுத்து படிக்க வைத்ததாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதற்கு ஜீவித்குமார் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ஏ.வாடிபட்டி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பிளஸ் 2 படிக்கும் வரை உறுதுணையாக இருந்தனர். பெற்றோர் 10 ஆண்டுகளாக சேமித்த பணத்தை செலவழித்து உதவினர். பின், தலைமை ஆசிரியர் மோகன் வழிகாட்டினார். அதன்பின் பகுதிநேர ஆசிரியராக சேர்ந்த அருள்முருகன் வழிகாட்டியாக இருந்ததால்' நீட்' தேர்வில் மதிப்பெண் எடுக்க முடிந்தது. அவர் ஆசிரியை சபரிமாலாவை தொடர்பு கொண்டதன் மூலம் அமெரிக்காவில் இருந்து காட்வின் என்பவர் பண உதவி செய்தது உண்மை.
மேலும் ஆசிரியை சபரிமாலா வெளியிட்டுள்ள வீடியோவில் அரசியல் கட்சியினர் மிரட்டியுள்ளனர் எனக்கூறியுள்ளார். அது தவறு. என்னை யாரும் மிரட்ட வில்லை. பா.ஜ.,வினரும் தேனி எம்.பி., ரவீந்திரநாத் சார்பிலும் பாராட்டிச் சென்றுள்ளனர். சபரிமாலா என்னை தத்தெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். முதலில் அந்த வீடியோ விவகாரம் எனக்கு தெரியாது.நான் முதலில் என் பெற்றோருக்கு மகன். என்னை யாரும் தத்தெடுக்கவில்லை. இனிமேல் இதுபோன்ற விடியோக்களை தயவு செய்து சபரிமாலா வெளியிட வேண்டாம். இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE