பொது செய்தி

தமிழ்நாடு

நிதியை நிறுத்தி வாசிப்புக்கு தடை போட்ட அரசு: நூலக வாசகர்கள் கடும் அதிருப்தி

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழகத்தில், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால், மக்களின் பொதுஅறிவை வளர்க்கும் நுாலகங்கள் திறக்கப்பட்டும், வாசிப்பதற்கு அனுமதி இல்லாததால் வாசகர்கள் தவிக்கின்றனர். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து, நுாலகத்தில் நாளிதழ்கள் வாசிப்பை அனுமதிக்க வேண்டும் என, வாசர்கள் வட்டம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.பொதுஅறிவையும், சமூக
நிதி, வாசிப்பு, தடை, அரசு,  நூலக வாசகர்கள், அதிருப்தி

தமிழகத்தில், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால், மக்களின் பொதுஅறிவை வளர்க்கும் நுாலகங்கள் திறக்கப்பட்டும், வாசிப்பதற்கு அனுமதி இல்லாததால் வாசகர்கள் தவிக்கின்றனர். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து, நுாலகத்தில் நாளிதழ்கள் வாசிப்பை அனுமதிக்க வேண்டும் என, வாசர்கள் வட்டம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

பொதுஅறிவையும், சமூக அறிவையும் வளர்க்கும் பொக்கிஷமாக நுாலகங்கள் விளங்குகின்றன. நீரின்றி அமையாது உலகு; நல்ல நுால்கள் இன்றி அமையாது அறிவார்ந்த உலகு. இதை உருவாக்குவதில் நுாலகங்களின் பங்கு மகத்தானது என்கின்றனர் சான்றோர். அதனால் தான், அரசும் பல நடவடிக்கைகள் எடுத்து, கிராமங்கள் தோறும் நுாலகங்களை ஏற்படுத்தி, வாசிப்பை ஊக்குவிக்கிறது.


latest tamil newsதமிழகத்தில், மாநில மைய நுாலகம், அண்ணா நுாற்றாண்டு நுாலகம், மாவட்ட மைய நுாலகங்கள் - 32, கிளை நுாலகங்கள் - 1,926, ஊர்ப்புற நுாலகங்கள் - 1,915, பகுதி நேர நுாலகங்கள் - 745 மற்றும் நடமாடும் நுாலகங்கள் - 14 என, மொத்தம், 4,634 நுாலகங்கள் உள்ளன. நுாலகங்கள் அனைத்தும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படுகின்றன.


வாசித்தல் முடக்கம்


கொரோனா தொற்று பரவல் துவங்கியதும், மார்ச் மாத இறுதியில் நுாலகங்கள் மூடப்பட்டன. ஏப்., மாதம் முதல் நுாலகங்களுக்கு நாளிதழ்கள், பருவ இதழ்கள் பெறுவதற்கு அரசு அனுமதிக்கவில்லை. அதற்கான தொகையையும் நிறுத்தி விட்டதாக நுாலகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு நுாலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், நுாலகத்தில், நாளிதழ்கள் பெறுவதற்கு அனுமதியில்லை. புத்தகங்களை எடுத்து செல்ல மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனால், நகரப்பகுதிகளில் நுாலக வாசகர்கள், புத்தகங்கள், நாளிதழ்கள் படித்து பொது அறிவையும், உலக நடப்பையும் அறிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். அதேபோன்று, வங்கி பணி, அரசு பணிக்கான போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் நுாலகத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.


latest tamil newsகிராமப்பகுதிகளில் வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள், பெரும்பாலும் ஊர்ப்புற நுாலகங்கள், பகுதி நேர நுாலகத்தையே நம்பியுள்ளனர். நுாலகத்தில் நாளிதழ் வாசிப்பு முடக்கப்பட்டுள்ளதால், பெரும்பான்மை மக்கள் பாதித்துள்ளனர். நுாலகங்கள் திறக்கப்பட்டும், மக்களால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.


வாசகர்கள் எதிர்பார்ப்பு


'குடிமகன்'களுக்காக, டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், பல தரப்பட்ட வயதினரின் அறிவை வளர்க்கும் நுாலகங்கள் மட்டும் முடக்கப்பட்டுள்ளன.கொரோனா விழிப்புணர்வால், அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி அரசு அறிவித்த சுகாதார நெறிமுறைகளை கடைபிடிப்பதால், தொற்று பாதிப்பு எண்ணிக்கை, இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், நுாலகத்தில் நுால்கள், பருவ இதழ்கள், நாளிதழ்கள் வாசிப்புக்கு அனுமதி அளித்து, அதற்கான உத்தரவை பொதுநுாலகத்துறை வெளியிட, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, நுாலக வாசகர் வட்டத்தில் எதிர்பார்ப்பாக உள்ளது.


என்ன செய்ய வேண்டும்!


* நுாலகம் திறந்தவுடன், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், உள்ளே, வெளியே கிருமிநாசினி தெளிக்க வேண்டும். நுாலகத்தின் நுழைவாயிலில் 'சானிடைசர்' வைக்க வேண்டும். வாசகர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்து உள்ளே அனுமதிக்க வேண்டும்.
*வாசர்கள் தங்கள் காலணிகளை வெளியில் கழற்றி விட்டு, உள்ளே செல்ல வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியில் அமர்ந்து வாசிக்க வேண்டும். கட்டாயம் கையுறை அணிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
* வழக்கமாக வரும் வாசர்களுக்கு, 'டோக்கன்' வழங்கி, அவர்களுக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். நுாலகத்தில், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்

* நுாலகத்தில் பணியில் இருக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க வேண்டும். தினமும் கபசுர குடிநீர் வழங்க வேண்டும்.

* கொரோனா தொற்று பரவல் தடுப்பு முறை குறித்து, வாசகர்கள் பார்வைக்கு நன்கு தெரியும் வகையில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் ஒட்ட வேண்டும்.இந்த விதிமுறைகளை கடைபிடித்தால், நுாலகத்தில் கொரோனா தொற்று பரவலை நிச்சயம் தவிர்க்க இயலும் என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.


ரூ. 116 கோடி நுாலக வரி


பொது நுாலகங்களின் செயல்பாடுகளுக்கு முக்கிய வருவாயான நுாலக வரி, சொத்துவரியில் இருந்து பெறப்படுகிறது. நுால்கள் மற்றும் பிற பொருட்கள் கொள்முதல் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய கட்டடங்கள் கட்டுதல், பராமரித்தல், பழமையான அரிய நுால்களை பாதுகாத்தல் மற்றும் இதர வளர்ச்சி பணிகளுக்கு, நுாலக வரி பயன்படுத்தப்படுகிறது. கடந்த, 2018 - 19ம் நிதியாண்டில், நுாலக வரியாக, 116.68 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. 2019 - 20ம் ஆண்டில், 125 கோடி ரூபாய் நுாலக மேம்பாட்டுக்கு அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


ரூ. 71 லட்சம் புரவலர் நிதி


மக்கள் இடையே கல்வியறிவு முற்றும் வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவித்ததால், மாநிலம் முழுவதும், 92.95 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.நுாலகத்துக்கு, 1,000 ரூபாய் வழங்கினால் புரவலராகவும், 5,000 ரூபாய் செலுத்துவதன் வாயிலாக பெரும் புரவலராகவும், 10 ஆயிரம் வழங்கினால் கொடையாளராகவும் திகழ்கின்றனர். இதுவரை, 1.28 லட்சம் புரவலர்கள்; 1,147 பெரும் புரவலர்கள்; 377 கொடையாளர்கள் நுாலகத்தில் சேர்ந்து, 71.89 லட்சம் ரூபாய் பங்களிப்பாக செலுத்தியுள்ளனர். ஆண்டுதோறும் பெறப்படும் வட்டி தொகை நுாலகங்களை வலுப்படுத்த பயன்படுகிறது, என, பொது நுாலகத்துறை தெரிவித்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X