சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைதளங்களில் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதற்கு தி.மு.க., எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான ‛800' ல் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் இருந்து விலகிக்கொள்ளும்படி பல பிரபலங்கள் விஜய் சேதுபதியிடம் தெரிவித்தனர். முத்தையா முரளிதரனே, தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக வேண்டும் என அறிக்கை விட்டார். இதனையடுத்து விஜய்சேதுபதியும் படத்தில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரித்திக் என்பவர், விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிகவும் வக்கிரத்துடன் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு தி.மு.க., எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கனிமொழி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு
விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட.
பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 20, 2020
மேலும் பல பிரபலங்கள், இந்த மிரட்டலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வழக்குப்பதிவு
இதனிடையே, மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக , சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.