வாஷிங்டன்: அமெரிக்காவில் எச்1-பி விசா கட்டுப்பாடுகளை எதிர்த்து கொலம்பியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
1952ம் ஆண்டு அமெரிக்க குடியேற்றம் மற்றும் தேசிய சட்டத்தில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. வல்லரசு நாடான அமெரிக்காவில் பல தனியார் நிறுவனங்கள் உள்ளன. இதில் பணிபுரிய வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு பல பட்டதாரிகள் வருகை தருகின்றனர். இவர்களுக்கு பணி நிமித்தமாக அமெரிக்காவில் தங்கும் உரிமையை வழங்கும் விசாவுக்கு பெயர் எச்-1. இது இரண்டு வகைப்படும் எச்-1 ஏ மற்றும் எச்-1 பி. வெளிநாட்டில் இருந்து பணி நிமித்தமாக அமெரிக்காவில் தங்கும் தொழிலாளர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகள் தங்க விசா வழங்கப்படும். பின்னர் அடுத்த மூன்று ஆண்டுகள் வீசாவை நீட்டித்துக் கொள்ளலாம்.

இவர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும் தனியார் நிறுவனம் இவர்களுக்கான சம்பளம், இதர செலவுகள், மருத்துவ காப்பீடு உள்ளிட்டவற்றை கவனித்துக்கொள்ளும். எச்-1 விசா வழங்க கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க அரசு தொழிலாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் உத்தரவுக்குப் பின்னர் வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 88 ஆயிரம் எச்1-பி விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டன.முந்தைய ஆண்டுகளை காட்டிலும் விசா வழங்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.
இதுகுறித்து அமெரிக்க சேம்பர் சிஇஓ தாமஸ் ஜே தோனோ கூறுகையில் அமெரிக்க பாதுகாப்பு செயலகம் எச்-1 பி விசா வழங்கும் நடைமுறையில் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கிறது. குறிப்பிட்ட ஒரு தனித்திறமை மற்றும் பட்டம் கொண்ட குடிமக்களையே தனியார் நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துகின்றன. ஆனால் அதிலும் அதிக கட்டுப்பாடுகள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு குடிமக்கள் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. விசா புதுப்பிக்கப்படவில்லை என்றால் அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல வேண்டியிருக்கும். இதனால் அமெரிக்க தனியார் நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்றார்.

எச்-1 பி விசா கட்டுப்பாடுகள் ஆசிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து பணி செய்யும் ஆர்வம் கொண்ட குடிமக்களை அதிகம் பாதித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த கட்டுப்பாடுகளுக்கு அதிக அளவில் எதிர்ப்பு எழுந்தது. அமெரிக்க அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வெளிநாட்டு பணியாளர்கள் மிகக் குறைவு. இந்த கட்டுப்பாடுகளில் தேர்ச்சி பெறுவதும் கடினம். அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்காகவே டிரம்ப் அரசு இவ்வாறு செய்கின்றது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE