புதுடில்லி : பிரபல பெண் வக்கீல் தீபிகா சிங் ராஜவத் பதிவிட்ட கார்ட்டூன் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அவரை கைது செய்ய வேண்டும் என டுவிட்டரில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருவதால் இந்த விஷயம் இந்திய அளவில் நம்பர் 1ஆக டிரெண்ட் ஆனது.
கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகி பிரபலமானவர் பெண் வக்கீல் தீபிகா சிங் ராஜவத். இவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் கார்ட்டூன் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு சித்திரம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வது போன்றும், மற்றொன்றில் பெண்ணை வழிபடுவது போன்றும் உள்ளது. முதல் சித்திரத்திற்கு மற்ற நாட்களில், 2வது சித்திரத்திற்கு நவராத்திரியில் என குறிப்பிட்டு 'என்ன ஒரு முரண்பாடு' என கூறியுள்ளார்.

நாடு முழுக்க நவராத்திரி கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இவரின் இந்த கேலி சித்திரம் சர்ச்சையாகி உள்ளது. சிலர் அவரின் இந்த கார்ட்டூனுக்கு ஆதரவு தெரிவித்தாலும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமையையும், நவராத்திரி வழிபாட்டையும் ஏன் ஒப்பிட வேண்டும். இது இந்துக்கள் மனதை புண்படுத்துவது போன்று உள்ளது என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்து மதத்தை மட்டும் ஏன் இழுக்கிறீர்கள் என சிலர் கருத்து பதிவிட்டனர். இன்னும் சிலர் அவர் ஒரு பப்ளிசிட்டி பைத்தியம், அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள் என தெரிவித்தனர். அதேசமயம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் அவரை கைது செய்ய வேண்டும் என கூறி Arrest_Deepika_Rajawat என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர். இது இந்திய அளவில் நம்பர் 1 ஆக டிரண்ட் ஆனது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE