புதுடில்லி: கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், அது இந்தியர்கள் அனைவருக்கும் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின், 'டிவி' சேனல்கள் வழியாக, பிரதமர் மோடி, ஆறு முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றி உள்ளார். ஏழாவது முறையாக, நேற்று மாலை, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசினார்.
இரண்டாவது அலை
அவர் பேசியதாவது:கொரோனா ஊரடங்கு அமல்படுத்தியதிலிருந்து, தற்போது வரை, தொற்று நோயை கட்டுப்படுத்துவதில், மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.தற்போது பொருளாதார நடவடிக்கைகளும் வேகமெடுத்து வருகின்றன. பண்டிகை காலம் துவங்கிவிட்டது. சந்தைகளில் வியாபாரம் சூடுபிடித்துஉள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கலாம்; ஆனால், வைரஸ் இன்னமும் இருக்கிறது. எனவே, மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பல நாடுகளில், கொரோனாவின் இரண்டாவது அலை துவங்கியுள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்தது. இப்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதை, கவனத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய - மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளாலும், டாக்டர் மற்றும் சுகாதார பணியாளர்கள் தன்னலம் கருதாமல் பாடுபடுவதாலும், கொரோனா பரவல், நம் நாட்டில் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது உண்மை தான். அதற்காக, கொரோனா நம்மை இனி தாக்காது என, அலட்சியம் காட்டக் கூடாது. நாட்டில், தினமும், 10 லட்சம் மக்களில், 5,500 பேர், தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்கா, பிரேசில் நாடுகளில், இந்த எண்ணிக்கை, 25 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையும், நம் நாட்டில் அதிகமாக உள்ளது. வைரசுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும், நம் நாட்டில் குறைவாக உள்ளது. இந்தியாவில், 10 லட்சம் பேரில், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை, 83 ஆக உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், ஸ்பெயின் போன்ற நாடுகளில், இந்த எண்ணிக்கை, 600க்கும் அதிகமாக உள்ளது. நாட்டில், 10 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2,000க்கும் அதிகமான பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
எச்சரிக்கை
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக, 90 ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 ஆயிரத்துக்கும் அதிகமான, தனிமைப்படுத்துதல் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் குறைந்துவிட்டதாக, மக்களின் ஒரு பகுதியினர் நினைப்பதாக தோன்றுகிறது. கொரோனா விழிப்புணர்வு சிறிதும் இல்லாமல், பலர் வெளியில் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக ஏராளமான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன; இது, மிகவும் தவறு. கொரோனா பாதிப்பு குறைவதை பார்த்து, பலர் முக கவசம் அணியாமல் அலட்சியமாக வருகின்றனர். முக கசவம் இல்லாமல் வெளியே வருவதால், உங்களுக்கு மட்டுமின்றி, குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எச்சரிக்கையாக இல்லாதோர் பாதிக்கப்படுவதுடன், அவர்களால் மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

தடுப்பூசி
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, முழு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து ஆராய்ச்சியில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.கொரோனா தடுப்பூசி, அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வோம். தடுப்பூசி வினியோகத்திற்கான திட்டங்கள் தயாராக உள்ளன. நோய், நெருப்பு போன்றவற்றை, சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அடுத்த சில மாதங்களை கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். கொரோனாவை முழுமையாக வீழ்த்தும் வரை, நம் போராட்டம் நிறைவு பெறாது. நவராத்திரி, பக்ரீத், தீபாவளி, குருநானக் ஜெயந்தி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் வருகின்றன. குளிர்காலமும் துவங்க உள்ளது.
அதனால், கொரோனா விழிப்புணர்வுடன் பண்டிகைகளை கொண்டாட வேண்டும். தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து, பண்டிகைகளை கொண்டாட வேண்டும். நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என, இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இந்த பண்டிகை காலம், உங்கள் வீடுகளில் மகிழ்ச்சியை ஏற்படுத்தட்டும்.இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.
பிராண வாயுவுக்கு தட்டுப்பாடில்லை
கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது: சர்வதேச அளவில், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. மூன்று மாதத்துக்கு பின், வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, நேற்று, 50 ஆயிரத்தை விட குறைந்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும், பிராண வாயுவுக்கு தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த, 10 மாதங்களில், பிராண வாயு உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE