சென்னை: ''அனைத்து சிறுபான்மையின மக்களுக்கும், பா.ஜ., ஆதரவான கட்சி. தற்போது தமிழகத்தில், தவிர்க்க முடியாத கட்சியாக உருவெடுத்துள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு, மாநில செயற்குழு கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. கூட்டத்தில், மாநில தலைவர் முருகன் பேசியதாவது: சிறுபான்மையின மக்களுக்கும், பட்டியலின மக்களுக்கும், பா.ஜ., எதிரி போன்ற மாய பிம்பத்தை, தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளனர். இதை, வாஜ்பாய் தான் உடைத்தெறிந்தார்.
ராமேஸ்வரத்தில் பிறந்து, எந்த அரசியல் பின்னணியும், சமூக பின்னணியும் இல்லாமல் வளர்ந்து, நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட விஞ்ஞானி அப்துல்கலாமை, ஜனாதிபதியாக ஆக்கியவர் வாஜ்பாய். அதேபோல, பட்டியலினத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்தை, ஜனாதிபதியாக்கி உள்ளார் பிரதமர் மோடி. தீண்டாமையை கடைப்பிடிக்க மாட்டோம் என, உறுதிமொழி ஏற்றால் மட்டுமே, பா.ஜ., உறுப்பினராக முடியும்.

அதேபோல், சீரான மதசார்பின்மை, நம் கட்சியின் கொள்கை. அனைத்து சிறுபான்மையின மக்களுக்கும், பா.ஜ., ஆதரவான கட்சி.முஸ்லிம் சகோதரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, முத்தலாக் முறையை, பிரதமர் நீக்கினார்.காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட, சிறப்பு அந்தஸ்தால், ஒரே ஒரு குடும்பம் மட்டும் பயனடைந்து வந்தது. இன்று சட்டப்பிரிவு, 360 நீக்கப்பட்டு, காஷ்மீரில் அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தால், இந்தியாவில் உள்ள, முஸ்லிம்கள் யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஆனால், முஸ்லிம்களை விரட்டி விடுவர் என, தவறாக பிரசாரம் செய்யப்பட்டது. போலி மத சார்பின்மை பேசுவோர் மற்றும், தி.மு.க.,வினரின் பொய் பிரசாரத்திற்கு, பலியாகி விடக்கூடாது.தமிழக அரசியலில், மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ., தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது.
பிரதமரின் நேர்மையான ஆட்சி, தமிழகத்திற்கு தேவை என, தமிழக மக்கள் நினைக்கின்றனர்.அதன் காரணமாக, தினமும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்று, சட்டசபையில் அமர்வர்; அதில், மாற்று கருத்து இல்லை. இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE