புதுடில்லி: விடுமுறை நாட்கள் மற்றும் வங்கி வேலை நேரம் அல்லாத தருணங்களில், பணம் செலுத்தும் ஏ.டி.எம்., மெஷின் மூலமாக, நம் கணக்கில் ரொக்க பணத்தை செலுத்துவதற்கு, தனியார் வங்கிகள் கட்டணம் வசூலிக்க துவங்கி இருக்கின்றன.
ஏற்கனவே, ஆக்சிஸ் வங்கி ஆகஸ்ட் மாத துவக்கத்திலிருந்து இப்படி ரொக்கம் செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க துவங்கி விட்டது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அடுத்த மாதத்திலிருந்து, வாடிக்கையாளர்களிடமிருந்து இத்தகைய கட்டணத்தை வசூலிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
வங்கி விடுமுறை நாட்களிலும், மாலை, 6 மணி முதல் காலை, 8 வரையிலான நேரத்திலும் பணம் செலுத்தும் ஏ.டி.எம்., மிஷின் மூலம் ரொக்கம் செலுத்துவதற்கு, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.மேலும், அடுத்த மாதம், முதல் தேதியிலிருந்து இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி; ஒரு மாதத்தில் ஒரு முறையிலோ அல்லது, பல முறையாகவோ, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மெஷின் மூலம் பணம் செலுத்தும் பட்சத்திலும், கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.இந்த கட்டணம் அடிப்படை சேமிப்புக் கணக்கு, ஜன் தன் கணக்கு, மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு கிடையாது என்றும் அறிவித்துள்ளது.

ஆக்சிஸ் வங்கியும் இதேபோல், 50 ரூபாய் கட்டணத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வசூலித்து வருகிறது.தனியார் வங்கிகளின் இத்தகைய முடிவுகளால் கடைக்காரர்கள், சிறு வணிகர்கள் ஆகியோர் தாங்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாவோம் என தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பெரும்பாலும் அன்றைய வணிகத்தை முடித்த பிறகு, மிஷின் மூலம் கணக்கில் பணத்தை செலுத்திவிட்டு வீட்டுக்கு செல்வர்.அதிகாலையில் கடை திறக்கும் சமயத்தில், பணத்தை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இனி இவர்கள் ரொக்கப் பணத்தை கடையிலேயே வைத்துவிட்டு செல்லவேண்டும்; அல்லது, வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற நிலை உருவாகும்.
இதுகுறித்து வங்கி தரப்பினர், பணத்தை கலெக்ட் செய்வதற்கு கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும், 'குறைந்த ரொக்கம்; அதிக டிஜிட்டல்' எனும் அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவு காரணமாகவும், இக்கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE