கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாகாண போலீஸ் உயரதிகாரியை ராணுவ வீரர்கள் கடத்தி சென்று அவமதித்துவிட்டதாக கூறி, போலீசார், ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கராச்சியில், ராணுவம் - போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்ற பெயரில் ஒன்று சேர்ந்துள்ள கட்சிகள், ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படும் பிரதமர் இம்ரான் கான் உடனடியாக பதவி விலக வேண்டும் என கராச்சியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் மூத்த தலைவர் மரியம் நவாசின் கணவர் சப்தார் அவான் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் போது, சிந்து மாகாண போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், முஷ்தாக் மெஹர் அவமதிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
நவாஸ் ஷெரீப் மற்றும் மரியம் நவாசின் செய்தி தொடர்பாளரும், சிந்து மாகாண முன்னாள் கவர்னருமான முகமது ஜூபையார், முஷ்தாக் மெஹரை, ராணுவ வீரர்கள் கடத்தி சென்று, வழக்குப்பதிவு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து, சிந்து மாகாணத்தில் பணிபுரியம் 3 கூடுதல் இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள், 25 டிஐஜிக்கள், 30 எஸ்ஸ்பிக்கள், ஏராளமான எஸ்பி, டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோர் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் விடுமுறைக்கு விண்ணப்பித்தனர். இந்த சம்பவம் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கராச்சியில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
முஷ்தாக் மெஹர் விடுமுறை கடிதம் அளித்ததை தொடர்ந்து ஏராளமான போலீசாரும் விடுமுறை கோரி கடிதங்களை அளிக்க துவங்கினர். தங்களின் மரியாதை உறுதி செய்யப்படாவிட்டால், தங்களது பதவியை ராஜினாமா செய்ய தயங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ, சிந்து மாகாண முதல்வர் உள்ளிட்டோர், முஷ்தாக் மெஹரை சந்தித்து பேசினர். அப்போது, தான், ராணுவ தளபதி பாஜ்வாவுடன் பேசியதாகவும், சம்பவம் குறித்து ஒளிவு மறைவின்றி விசாரணை நடக்கும் என தனக்கு உறுதியளிக்கப்பட்டதாக பூட்டோ தெரிவித்தார். தொடர்ந்து, தனது விடுப்பு கடிதத்தை திரும்ப பெற்ற முஷ்தாக் மெஹர், நாட்டின் நலன் கருதி போலீசார் விடுப்பை ரத்து செய்துவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இந்நிலையில், கராச்சி நகரில் பாகிஸ்தான் ராணுவத்திற்கும், சிந்து மாகாண போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், பல கட்டடங்களுக்கு தீவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு இடத்தில் குண்டுவெடித்ததாகவும் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE