சென்னை:நடிகர் விஜய் சேதுபதிமகளுக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர், இலங்கையை சேர்ந்தவர் என சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், முத்தையா முரளிதரன். தமிழரான இவர், 800 விக்கெட்டுகளை வீழ்த்தி, உலக சாதனை படைத்தவர். இவருடைய வாழ்க்கை வரலாற்றை, 800 என்ற பெயரில், திரைப்படமாக தயாரிக்க திட்டமிடப்பட்டது. இப்படத்தில், முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில், விஜய்சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு, சினிமா பிரபலங்கள், கவிஞர்கள் என, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுக்கு எதிராக, அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்திய போது, முத்தையா முரளிதரன், அரசுக்கு ஆதரவாக செயல்பட்டார். இவரது தோற்றத்தில், விஜய் சேதுபதி நடித்தால், பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என, போர்க்குரல் எழுப்பப் பட்டது.இந்நிலையில், முத்தையா முரளிதரன், தன் வாழ்க்கை வரலாற்று படத்தில், விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என, 'டுவிட்டர்' வாயிலாக வேண்டுகோள் விடுத்தார். அதற்கு, விஜய் சேதுபதியும், 'நன்றி, வணக்கம்' என, பதில் அளித்தார்.
இதிலிருந்து, விஜய்சேதுபதி, அந்த படத்தில் நடிக்கவில்லை என்பது தெரிய வந்தது. அதனால், பிரச்னை முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்பட்டநிலையில், விஜய் சேதுபதி மகளுக்கு, 'டுவிட்டரில்' மர்ம நபர் ஒருவர், பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து, சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை தேடி வந்தனர்.
இதனிடையே டுவிட்டரில் மிரட்டல் விடுத்தவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதும் அங்கிருந்து டுவிட்டர் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார் என்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர் மேலும் அவரை கைது செய்ய இண்டர்போல் போலீசார் உதவியுடன் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE