இந்தியாவில் காற்று மாசால் பலியான குழந்தைகள் 1.16 லட்சம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் காற்று மாசால் பலியான குழந்தைகள் 1.16 லட்சம்

Updated : அக் 23, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி : 'இந்தியாவில், காற்று மாசால், கடந்த ஆண்டு, 1.16 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளனர். மேலும், காற்று மாசால், பக்கவாதம், நெஞ்சு வலி, நீரிழிவு, நுரையிரல் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, 16.7 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்' என, அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு உட்பட சில அமைப்புகளால்
 இந்தியா, காற்று மாசு, 1.16 லட்சம், குழந்தைகள்

புதுடில்லி : 'இந்தியாவில், காற்று மாசால், கடந்த ஆண்டு, 1.16 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளனர். மேலும், காற்று மாசால், பக்கவாதம், நெஞ்சு வலி, நீரிழிவு, நுரையிரல் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, 16.7 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்' என, அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு உட்பட சில அமைப்புகளால் துவக்கப்பட்ட, 'ஹெல்த் எபக்டிங் இன்ஸ்ஸ்டியூட்' நிறுவனம், ஆண்டுதோறும், உலகளவில் காற்று மாசு உட்பட சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டு வருகிறது.
கடந்த ஆண்டு, உலகில் காற்று மாசால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, 'ஸ்டேட் ஆப் குளோபல் ஏர், 2020' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா பற்றி கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில், காற்று மாசால் மட்டும், 1.16 லட்சம் குழந்தைகள், பிறந்த ஒரு மாதத்தில் இறந்து உள்ளன. காற்று மாசால், தாயின் கருவில் இருக்கும் போதே, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால், குறைபிரசவம் ஏற்படுகிறது அல்லது குறைந்த எடையில், குழந்தைகள் பிறக்கின்றன.

பிறந்த குழந்தைகள், ஒரு மாதத்துக்குள் இறப்பதற்கு, இவை தான் முக்கிய காரணங்களாக உள்ளன. வெளியில் உள்ள காற்று மாசாலும், வீட்டில், விறகு, விலங்குகளின் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் எரிப்பொருட்கள், கரி போன்றவற்றை சமையலுக்காக எரிக்கப்படும் போது கிளம்பும் புகையாலும், கருவில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன.

இந்தியாவில் கடந்த ஆண்டு, இறந்தவர்களில், 16.7 லட்சத்துக்கும் அதிகமானோரின் மரணத்துக்கு, காற்று மாசு தான் காரணமாக இருந்துள்ளது. காற்று மாசால் இவர்கள், பக்கவாதம், நெஞ்சு வலி, நீரிழிவு, நுரையீரல் புற்றுநோய், ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில், காற்று மாசால், ஆண்டு தோறும், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள், பிறந்த ஒரு மாதத்தில் இறக்கின்றன.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பள்ளிகளுக்கு அரசு உத்தரவு



ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், பயிர் கழிவுகளை விவசாயிகள் எரிப்பது, டில்லியில் காற்று மாசு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும், நவம்பர், டிசம்பர் மாதங்களில், டில்லியில் காற்று மாசு மிகவும் அதிகரிப்பது வழக்கமாக உள்ளது.இந்நிலையில், டில்லி அரசு, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'பயிர் கழிவுகளை எரிப்பதால், ஏற்படும் காற்று மாசு பற்றி, மாணவர்களிடம் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 'மேலும், பண்டிகை நாட்களில், பட்டாசுகளை வெடிப்பதாலும், காற்று மாசு அதிகரிக்கிறது. இதனால், மாணவர்களிடம், பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என, வலியுறுத்த வேண்டும்' என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


காற்றின் தரம்டில்லியில் மோசம்



தலைநகர் டில்லியில், காற்றின் தரம், நேற்று காலை மோசமாக இருந்தது. இது பற்றி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், 'டில்லியில் நேற்று காலை, 10:00 மணிக்கு, ஏ.கியூ.ஐ., எனப்படும் காற்று தர குறியீடு, 268 ஆக பதிவானது. நேற்று முன்தினம், 223 ஆகவும், 19ம் தேதி, 244 ஆகவும், 18ம் தேதி, 254 ஆகவும்,ஏ.கியூ.ஐ., பதிவானது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 'அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதும், டில்லியின் காற்றின் தரம் குறைய காரணம்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.'ஏ.கியூ.ஐ., 50க்குள் இருந்தால், சிறப்பு; 100க்குள் இருந்தால் திருப்திகரம்; 200க்குள் இருந்தால், மிதமானது; 300க்குள் இருந்தால் மோசம், 400க்குள் இருந்தால் மிக மோசம், 500க்குள் இருந்தால், ஆபத்து' என, சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X