புதுடில்லி : 'மறைப்பதற்கு நிறைய காரணங்கள் இருந்த கட்சி, ஆட்சியில் இருந்ததால் ஒரு ஊழல் வழக்கு மூடிமறைக்கப்பட்டதற்கு, போபர்ஸ் பீரங்கி ஊழலை சிறந்த உதாரணமாக கூறலாம்' என, சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர், ஆர்.கே. ராகவன், தன் நுாலில் கூறியுள்ளார்.
காங்.,கைச் சேர்ந்த, மறைந்த பிரதமர் ராஜிவ் ஆட்சியின்போது, ராணுவத்துக்கு, ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 1,437 கோடி ரூபாய்க்கு பீரங்கிகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக, அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு, 64 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது.
அனுபவம்
நீண்ட காலம் நடந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட ராஜிவ் முதல் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.இந்த வழக்கின் விசாரணையில் ஈடுபட்டிருந்த, தமிழகத்தைச் சேர்ந்த, மூத்த, ஐ.பி.எஸ்., அதிகாரி யும், சி.பி.ஐ., முன்னாள் இயக்குனருமான, ஆர்.கே.ராகவன், 'சிறந்த பயணம் மேற்கொள்ளப்பட்ட சாலை' என்ற பெயரில், சுயசரிதை எழுதியுள்ளார். விரைவில் இது விற்பனைக்கு வர உள்ளது.
அந்த புத்தகத்தில், போபர்ஸ் ஊழல் விசாரணை தொடர்பாக தன் அனுபவத்தை அவர் குறிப்பிட்டு உள்ளார். அவர் கூறியுள்ளதாவது:சி.பி.ஐ., இயக்குனராக, 1999 - 2001 காலகட்டத்தில் இருந்தபோது, போபர்ஸ் ஊழல் குறித்து நேரடியாக விசாரித்தேன். இந்த வழக்கில், பல அனுபவங்கள் கிடைத்தன. கடந்த, 1990களில் மற்றும் 2004 - 14 காலகட்டத்தில் மத்தியில் காங்கிரஸ் அரசுகள் அமைந்திருந்தன. மறைப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ள கட்சி, ஆட்சியில் இருந்தால், ஒரு ஊழலை எப்படி மூடி மறைக்க முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், போபர்ஸ் ஊழல் வழக்கு தான்.
குவாத்ரோச்சி
இந்த ஊழல் வழக்கில், காங்., கட்சிக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது. ஆனால், ஊழல் பணம் கட்சிக்கு சென்றதா என்பதை உறுதியாக கூற முடியவில்லை. அதேபோல், ராஜிவுக்கு பணம் சென்றதா என்பதையும் உறுதியுடன் கூற முடியவில்லை. ஆனால், ராஜிவுக்கு நெருக்கமான குவாத்ரோச்சி, ஹிந்துஜா சகோதரர்களுக்கு பணம் சென்று உள்ளது.இந்த மோசடி தொடர்பாக, ஸ்வீடன் வானொலி மற்றும் இந்தியாவில், 'ஹிந்து' ஆங்கில நாளிதழ் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டன. அதனால், வேறு வழியில்லாமல், சி.பி.ஐ., விசாரணைக்கு ராஜிவ் உத்தரவிட்டார். ஆனால், அனைத்து நிலைகளிலும், ஊழல் விசாரணையை முடக்குவதற்கும், மூடி மறைப்பதற்கும் முயற்சிகள் நடந்தன. அதனால் தான், சி.பி.ஐ.,யால் சரியான முறையில் ஆதாரங்களை தாக்கல் செய்ய முடியவில்லை.
இழுத்தடிப்பு
உதாரணத்துக்கு, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, இத்தாலி தொழிலதிபரான, குவாத்ரோச்சியை கைது செய்ய, சி.பி.ஐ., திட்டமிட்டது. ஆனால், அரசின் உயர் பதவியில் இருந்தவர் தகவல் கொடுத்து, அவரை வெளிநாட்டுக்கு தப்பிக்க வைத்தார்.இந்த வழக்கில், பல்வேறு நாடுகளில் இருந்து தகவல்களை, ஆதாரங்களைப் பெறுவதற்கு, அரசின் உதவியை, சி.பி.ஐ., நாட வேண்டியிருந்தது. அதற்கு ஒப்புதல் அளிக்க, இழுத்தடிப்பு செய்தனர்.
வருத்தம்
மேலும், குவாத்ரோச்சியை நாடு கடத்தி வருவதற்கு, 200 கோடி ரூபாய் ஏற்கனவே செலவழித்துவிட்டதால், அந்த முயற்சியை கைவிடுவதாகவும் அறிவித்தனர்.அதேபோல் நீதிமன்ற விசாரணைகளிலும், அரசின் தலையீடு அதிகம் இருந்தது. ஆட்சியாளர்களுக்கு ஏற்ப, நீதிமன்றம் வளைந்து கொடுத்தது, தற்போதும் வருத்தத்தை அளிக்கிறது.இவ்வாறு, அவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE