சென்னை : தமிழகத்தில், கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும், இன்று முதல், இரவு, 10:00 மணி வரை திறந்திருக்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என, அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதால், வியாபாரிகள், பொது மக்கள் நலன் கருதி, அரசு இந்த அறிவிப்பை, நேற்று வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா நோய் பரவலைத் தடுக்க, மார்ச் 25 முதல், ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்று மாதங்களுக்கு பின், மக்களின் வாழ்வாதாரம் கருதி, தமிழக அரசு, அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
தடை தொடர்கிறது
எனினும், இம்மாதம் 31ம் தேதி வரை, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அறிவித்த தளர்வுகளின்படி, இரவு, 9:00 மணி வரை கடைகள் திறந்திருக்க, அனுமதி அளிக்கப்பட்டது.உணவகங்கள் மற்றும் டீக்கடைகள், காலை, 6:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை திறந்திருக்கவும், இரவு, 10:00 மணி வரை, 'பார்சல்' சேவைக்கும், அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.மின்சார ரயில் இயங்கவும், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலா தலங்கள் போன்றவற்றை திறக்கவும், தடை தொடர்கிறது.இம்மாதத்தில் துவங்கி, அடுத்தடுத்து ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என, பண்டிகைகள் வருவதால், இரவு, 10:00 மணி வரை கடைகளை திறக்க, அனுமதிக்க வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்று, முதல்வர் பழனிச்சாமி, நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா நோய் தொற்றை தடுக்க, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தமிழகத்தில், மார்ச், 25 முதல், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.நோய் தொற்றிலிருந்து, மக்களை காத்து, அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் நோய் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்கு பின், குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம், நாட்டிலேயே அதிகமாக உள்ளது.
6 அடி இடைவெளி
மேலும், நோய் தொற்றால் ஏற்படும் உயிரிழப்பும் குறைவாக இருந்து வருகிறது.எதிர்வரும் பண்டிகைக் காலம், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம், நோய் தொற்றின் தன்மை ஆகியவற்றை கருத்தில் வைத்து, இரவு, 10:00 மணி வரை, கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது.தமிழகம் முழுதும், முழு கட்டுப்பாட்டு பகுதி தவிர, மற்ற பகுதிகளில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், இன்று முதல், இரவு, 10:00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன.
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில், நோய் தொற்று அதிகரிக்காமல் தடுக்க, கடைகள் மற்றும் பொது இடங்களில், மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். முக கவசம் அணிவதையும், குறைந்தது, 6 அடி இடைவெளி கடைப்பிடிப்பதையும், அடிக்கடி சோப்பால் கைகளை கழுவுவதையும், பொது மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.திரையரங்கு உரிமையாளர்கள், முதல்வரை சந்தித்து, திரையரங்குகளை திறக்க, அனுமதி அளிக்கும்படி கோரியுள்ளனர். எனவே, அடுத்த வாரம், திரையரங்கு திறப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE