சென்னை,: எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள வெங்காயம் விற்பனை, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சூடுபிடித்துள்ளது. மஹாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், பெரிய வெங்காயம் அதிகம் உற்பத்தியாகிறது.
தட்டுப்பாடு
இம்மாநிலங்களில் உள்ள இருப்பிற்கேற்ப, நாடு முழுதும் வெங்காயம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மழையால், இம்மாநிலங்களில் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பண்டிகை நேரத்தில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது. சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை மார்க்கெட்டில், 1 கிலோ பெரிய வெங்காயம், 100 ரூபாய், 80 ரூபாய், 60 ரூபாய் என, மூன்று தரங்களில் விற்கப்படுகிறது.சில்லறை விலையில், 1 கிலோ, 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், பொது மக்கள், உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தட்டுப்பாடு அதிகரித்து, விலை மேலும் உயரும் என, கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம், எகிப்து நாட்டில் இருந்து, 22 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. நேற்று, 23 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு, விற்கப்பட்டு வந்தது.
சிக்கல்
எகிப்து வெங்காயம், அடர் சிவப்பு நிறத்தில் உள்ளது. அதன் காரத்தன்மையும் சற்று அதிகமாக உள்ளது. 1 வெங்காயம், 200 கிராம் வரை எடை உள்ளது. இதனால், வீடுகளில் அதைப் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. உணவகங்களின் தேவைக் காக, அவற்றை பலரும் வாங்க துவங்கியுள்ளனர். நேற்று 1 கிலோ எகிப்து வெங்காயம், 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE