புதுடில்லி : ''போலீஸ்துறையை நவீனப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
நாட்டைப் பாதுகாப்பதற்காக வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த போலீசாரின் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.இதையொட்டி டில்லி சாணக்கியபுரியில் உள்ள தேசிய போலீசார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர் கூறியதாவது:லடாக் எல்லையில் 1959ம் ஆண்டு இதேநாளில் சீன ராணுவத்தினரின் அத்துமீறலால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 10 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.இதையடுத்து தான் அக். 21ல் போலீசார் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
போலீசாரின் பணி இப்போது கடும் சவால்கள் நிறைந்ததாக உள்ளது. பயங்கரவாதம், கள்ள ரூபாய் நோட்டுகள்,போதைப் பொருள் கடத்தல், சைபர் குற்றங்கள், ஆயுதங்கள் கடத்தல், மனிதர்கள் கடத்தல் என பல பிரச்னைகளை போலீசார் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த குற்றங்களை வெற்றிகரமாக முறியடிக்க போலீஸ் துறையை நவீனப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கான நடவடிக்கைகைள மத்திய அரசு எடுத்து வருகிறது.எல்லை பாதுகாப்பிலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எல்லையில் மட்டுமின்றி உள்நாட்டிலும் போலீசாரின் விழிப்புடன் செயல்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.நாட்டை பாதுகாக்கும் பணியில் இதுவரை 35 ஆயிரத்து 398 போலீசார் உயிர் தியாகம் செய்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டில்264 போலீசார் உயிர் தியாகம் செய்துள்ளனர்.கொரோனா பரவலில் தன்னலம் பார்க்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 343 போலீசார் வைரஸ் தொற்றுக்கு பலியானது பெரும் வேதனை. போலீசார் சிறப்பாக பணியாற்றுவதால் தான் மக்கள் நிம்மதியாக துாங்குகின்றனர்.இவ்வாறு அமித் ஷா பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE