கூடலுார் : இயற்கை உரங்கள் தயாரிக்கும் பணியில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை பயன்படுத்தி வாழை சாகுபடியில் மகசூல் அதிகம் பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் தென்னை மரங்களுக்கு அடுத்தபடியாக உள்ளது வாழை சாகுபடி. சில ஆண்டுகளாக தென்னையில் ஏற்பட்ட வாடல் நோயால் ஏராளமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதற்கு மாற்று விவசாயமாக அப்பகுதியில் வாழை சாகுபடியையே அதிகம் செய்து வருகின்றனர். கூடலுார், கம்பம், காமயகவுண்டன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் இயற்கை உரங்களை பயன்படுத்தும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி மாடுகளின் கழிவுகளில் இருந்து கிடைக்கும் பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், சாண எரு ஆகியவற்றை விவசாயிகளே தங்களது தோட்டத்தில் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் விலை குறைவால் சோர்வடைந்த விவசாயிகள் தற்போது இதன்மூலம் அதிகம் மகசூல் பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கூடலுார் விவசாயி சீ. வீருபாப்பு கூறியதாவது:இயற்கை உரங்களால் சாகுபடி செய்யும் உணவுப் பொருட்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. வாழையின் வீரியத்தன்மையும், வளர்ச்சியும் அதிகமாக உள்ளது. இதனை முழுமையாக பயன்படுத்த விவசாயிகள் மாற வேண்டும். 2019 ஐ விட தற்போது கூடுதலான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர், என்றார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE