கோவை மாநகராட்சி பகுதியில், கொரோனா பரவல் குறைந்து வருகிறது. 3,000 பேருக்கு சளி, ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனை செய்ததில், நேற்று, 150 பேருக்கே தொற்று உறுதியானது கண்டறியப்பட்டது.
அதனால், தொற்று பரவல் தற்போதைய நிலையை கண்டறிய, குறிப்பிட்ட பகுதிகளில், பொதுமக்களிடம் ரத்த மாதிரி சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதா என கண்டறியப்படுகிறது. கோவை மாநகராட்சி பகுதியில், கிழக்கு மண்டத்தில், 8, வடக்கு மண்டலத்தில், 4 இடங்களில், தலா, 30 பேர் என, மொத்தம், 360 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கும் பணியில், மாநகராட்சி மருத்துவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.இச்சூழலில், தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி, மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க, கடைத்தெருவுக்கு பொதுமக்கள் சாரை, சாரையாக வர ஆரம்பித்து விட்டனர். வர்த்தக பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது.
பல இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றுவதில்லை; முக கவசமும் அணிந்திருப்பதில்லை .மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர், ஒப்பணக்கார வீதியில் உள்ள கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். வருகை பதிவேடு பராமரிக்கப்படுகிறதா, வாடிக்கையாளர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்படுகிறதா என பார்வையிட்டனர்.முக கவசம் அணியாமல் ஊழியர்கள் பணியாற்றியது, சமூக இடைவெளி பின்பற்றாத காரணத்தால், 5 கடைகளுக்கு தலா, ரூ.5,000, ஒரு கடைக்கு ரூ.500 வீதம் அபராதம் விதித்து, வசூலித்தனர்.
மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் கூறுகையில், 'கோவையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தி இருந்தாலும், பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க, கிராமப் பகுதிகளில் இருந்து நகருக்கு ஏராளமானோர் வந்து செல்வர்.அவர்களிடம் இருந்து கோவையில் வசிப்பவர்களுக்கு பரவலாம் அல்லது, இங்கிருப்பவர்களில் யாருக்காவது தொற்று இருந்து, கிராம மக்களுக்கு பரவலாம். அதனால், தொற்று பரவல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் எவ்வித தொய்வுமின்றி பணியாற்ற, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE