புதுடில்லி: கடந்த மாதம் கைது செய்யப்பட்ட சீன பெண் உளவாளிக்கு, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் குறித்த ரகசிய தகவல்களை பெற்றுத் தர, பணி கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
டில்லியைச் சேர்ந்த, பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, கடந்த மாதம், சிறப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். சீன உளவுத் துறைக்கு, அவர் ரகசிய தகவல்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவல்களுக்காக, அவருக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டதும் தெரியவந்தது.
இதில் தொடர்புடைய, குயிங் ஷி என்ற சீன பெண்ணும், ஷெர் சிங் என்ற நேபாள நபரும், அப்போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடம், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த சில முக்கிய தகவல்கள், தற்போது வெளியாகி உள்ளன.பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய மத்திய அரசு அலுவலகங்கள் குறித்த ரகசிய தகவல்களை சேகரித்து கொடுக்க, இந்த உளவுக் குழுவுக்கு, பணி கொடுக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் மூத்த அதிகாரிகள் குறித்த தகவல்களும், சீன பெண்ணான குயிங் ஷியிடம் கோரப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்டுள்ள குயிங் ஷி, போதி கயா கோவிலின் சீன துறவி ஒருவர் வாயிலாக, கோல்கட்டாவை சேர்ந்த செல்வாக்குமிக்க பெண் ஒருவருக்கு, அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த கோல்கட்டா பெண் யார் என்பதை கண்டறியும் முயற்சியில், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்த கோல்கட்டா பெண், குயிங் ஷிக்கு, சில ஆவணங்களை வழங்கி இருக்கிறார். சீன மொழியில் உள்ள அந்த ஆவணங்களை மொழிபெயர்த்து கொடுக்க, குயிங் ஷிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரின் மனைவி டிங் என்பவருக்கும், சோவ் என்பவருக்கும் அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE