புதுடில்லி : எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பு களில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கும்படி, தமிழக கவர்னருக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெய சுகின் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர, நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்து, தமிழக அரசு, 2005ல் உத்தரவிட்டது. ஏழை மாணவர்களால், தனியார் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற முடியாது என்ற காரணத்தால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதன் பின், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ கல்லுாரிகளில், அட்மிஷன் வழங்கப்பட்டது.
அப்போதும், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள், சொற்ப அளவிலேயே மருத்துவ படிப்பில் சேர முடிந்தது.இந்த நிலையை போக்க நினைத்த தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படித்து, 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புகளில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, சமீபத்தில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த மசோதா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இதற்கான ஒப்புதலை, உடனடியாக வழங்கும்படி, தமிழக கவர்னருக்கு, நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.இதன் வாயிலாக, 300 ஏழை மாணவர்கள், நடப்பு ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்து பயன்பெற வாய்ப்பு உருவாகும்.இவ்வாறு, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு
உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE